2. கேள்விச் செல்வம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. கேள்விச் செல்வம்


"கேள்வி ஒரு செல்வம், அதுவும் மிக உயர்ந்த செல்வம்" என்பது வள்ளுவர் கருத்து. இதனை,

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

என்ற குறள் மெய்ப்பிக்கும்.

பத்து ஆண்டுகள் படித்து அறிபவைகளை, முப்பது ஆண்டுகள் பார்த்து அறிபவைகளை, ஐம்பது ஆண்டுகள் ஆராய்ந்து அறிபவைகளை, ஐந்நூறு மணித்துளிகளில் கேட்டு அறிந்துகொள்ளலாம். இதனாலேயே கேள்விச் செல்வம் தலைசிறந்த செல்வம் எனக் கருதப் பெற்றுவருகிறது.

"கல்வியைவிட உயிர்க்கு உற்ற துணை வேறில்லை" என்று கல்விச் செல்வத்தை உயர்த்திக் கூறிய வள்ளுவர், "கற்றிலனாயினும் கேட்க" எனக் கூறியிருப்பதும், பிறர் "கற்றலிற் கேட்டலே நன்று" எனக் கூறியிருப்பதும் கேள்விச் செல்வத்தின் சிறப்பை உணர்த்துவனவாகும். -

மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேற்றுமைகள் பல, அவற்றுள் ஒன்று, "மக்கள் செவி வழியாகவும் சுவையைப் பெறுவார்கள். மாக்களால் இயலாது" என்பது, "உணவு" என்பது வாயால் உண்பது. "உணர்வு” என்பது செவியால் பெறுவது. வள்ளுவர் இவ்விரண்டையும் மாற்றி அமைத்திருப்பது வியப்பிற்குறியதே. இதனைச் "செவிக்கு உணவு" என்பதாலும். "வாய் உணவின் மாக்கள்" என்பதாலும் நன்கறியலாம். இவை இவற்றின் உயர்வையும், இழிவையும் உணர்ந்து வந்தன போலும்.


செவிக்கு உணவு இல்லாதபோது தான் வயிற்றுக்குச் சிறிது உணவளிக்க வேண்டும் என்பது வள்ளுவர் நெறி. இதனால், கேள்விச் செல்வத்தைப் பெற வாய்ப்புள்ளபோது உண்பதைக்கூட ஒத்திவைக்க வேண்டும் என்றாகிறது.


"கேள்வி ஒரு செல்வம்" என்பதால், எதையும் எவரிடமும் கேட்டுவிடக்கூடாது. கேட்கும்போது "கேட்டுத்தான் ஆகவேண்டுமா?" என்று உன்னையே நீ ஒரு கேள்வி கேட்டுக் கொள். பிறகு யோசித்துக் கேள், அவனும் யோசித்துப் பதில் கூறுவதை மட்டுமே கேள். அதையும் குறைவாகவே கேள். சுருக்கமாகக் கேள், அதையும் மெதுவாகக் கேள் இதுவே கேள்விச் செல்வத்தைப் பெறும் சரியான வழி.


அறிவற்றவர்களிடம் எதையும் கேட்டுவிடாதே. அதனால் இரண்டு வகையான துன்பம் வரும். முதலாவது அவன் தவறாகவும் பதில் கூறிவிடுவான். இரண்டாவது அவன் தன்னைவிட உன்னை மட்டமானவன் என்றும் கருதிவிடுவான். ஆகவே, அறிவாளிகளிடம் மட்டுமே கேள். அதில் இலாபம் கிடைக்காமற் போய்விடினும், நட்டத்திற்கு வழியேயிராது.


ஓயாமற் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பவன் ஓட்டை வாயன். - தேனவயற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவன் மூடன். இழிவான கேள்விகளைக் கேட்பவன் மோசமானவன். தெரிந்துகொண்டு கேள்விகளைக் கேட்பவன் கலகக்காரன். தெரிந்துகொண்டதாக நினைத்துக் கொண்டு கேள்விகளைக் கேட்பவன் அறிவற்றவன். தெரிந்து கொள்ள விரும்பித் துடிதுடித்துக் கேள்விகளைக் கேட்பவன் பொறுமையற்றவன். அறிய வேண்டியதை அறிந்து கொள்ள விரும்பித் தகுதியுடையவர்களை அணுகி அமைதியாகக் கேட்டு அறிபவனே அறிஞன்.

ஒரு மனிதனை 'யார்?' என்று அறிய இரண்டுவித வழிகள் உள்ளன. ஒன்று அவனுடைய நண்பர்கள் யார்? என் அறிந்து கொள்வது. மற்றொன்று அவனுடைய கேள்விகள் என்னென்ன? என அறிந்துகொள்வது. முன்னது அவனுடைய நடத்தையையும், பின்னது அவனுடைய அறிவையும் தெளிவாகக் காட்டிவிடும்.

"சாதுக்கு சாது மிலாதோ சங்கே கர்கே ஞானகே தேர்தோ பாத், கத்தைக்கு கத்தை மிலாதோ தோதோமாறே லாத்” என்பது ஒரு இந்துஸ்தானிப் பழமொழி."சாதுக்களும் சாதுக்களும் சந்தித்துக் கொண்டால் இரண்டொரு பேச்சுக்கள் மட்டுமே பேசுவார்கள். அதுவும் சந்தேகத்தைப் போக்கக் கூடியதாகவிருக்கும். அதுவும். ஞானமார்க்கமானதாகவே யிருக்கும். கழுதையும் கழுதையும் சந்தித்துக் கொண்டால் ஒவ்வொன்றும் மறுபக்கம் திரும்பிக்கொண்டு ஆளுக்கு இரண்டு உதைகொடுத்துக் கொள்ளும்" என்பது இதன் பொருள். கேள்வியின் சிறப்பையும், சந்திப்போரின் தகுதியையும் விளக்க இதைவிட நல்ல பழமொழி வேறில்லை.

கேள்விச் செல்வத்தைப் பெறும் வழியும் இரண்டு. ஒன்று கேட்டு அறிவது மற்றொன்று கேளாமல் அறிவது. "சொல்லாமற் சொல்லுதல்" என்பது குறிப்பினால் உணர்த்துதல், "நினையாமல் நினைத்தல்" என்பது மறந்து நினையாமல், மறவாமலே நினைத்திருத்தல். "போகாமற் போதல்" என்பது, எங்கு போகிறோம்? என்ற எண்ணமே இல்லாமற் போதல். "கேளாமற் கேட்டல்" என்பது நாமாகக் கேளாமல் பிறர் தாமாகச் சொல்வதைக் கேட்டல்.

கேளாமற் கேட்கும் இடங்கள் பேச்சு மேடை, இசையரங்கு நாடகக் கொட்டகை, நிழற்படக் கொட்டகை, இரயில் நிலையம், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தண்ணிர்க் குழாய் முதலியன.

கேளாமற் கேட்கும் வாய்ப்பை இயல்பாகப் பெற்றவர்கள் வண்டியோட்டிகளே. மாடு, குதிரை, ரிக்சா, மோட்டார் வண்டிகளிற் பயணஞ் செய்வோர் வண்டியோட்டி ஒருவன் இருப்பதாகக்கூட எண்ணாமல், தாங்கள் மட்டுமே தனித்து இருப்பதாக நினைத்துப் பேசக்கூடாதவைகளை யெல்லாம் பேசிக் கொண்டே போவார்கள். வண்டியோட்டிகளுக்குத் தெரியாத செய்தி ஊரில் எதுவுமேயிராது! இந்த வண்டியோட்டிகள் மற்றவர்களைவிடத் திறமைசாலிகளாகக் காணப்படுவது இதன் பொருட்டேயாம். இங்கிலாந்தில் ஒரு வண்டியோட்டி சிறந்த எழுத்தாளனாக மாறிப் பெரும் பொருள் திரட்டி விட்டானாம். அவன் முதலில் எழுதி வெளியிட்ட நூலின் பெயர் என்ன தெரியுமா? "என் காதில் விழுந்தவை" என்பதே. அவனைப் பொறுத்தமட்டில் கேள்வி அவனுக்குச் செல்வமாகவே மாறிவிட்டது.

ஆகவே, நீ கேளாமற் கேட்கும் செல்வத்தையே மிகுதியாகப் பெறு. நீயாக எதையும் அவசரப்பட்டுக் கேட்டுக் கொண்டிராதே. அவர்களே சொல்லும்படியான ஒரு சூழ் நிலையை உண்டாக்கு. அப்போதும் அவர்கள் சொல்ல வில்லையானால் சிறிது பொறுத்திரு. தானாக யாவும் வெளி வந்துவிடும். இரண்டொரு மணித்துளிகளுக்குப் பிறகு அறியக் கூடியதை முன்னதாக அறியத் துடிதுடித்துப் பலரையும் கேட்டுக்கொண்டேயிராதே அது உன் தகுதியைக் குறைத்துக் காட்டிவிடும்.

பல்லாண்டுகளுக்கு முன்பு நான் பயணஞ் செய்து வந்த வண்டியில் பலர் பலவாறு பேசிக்கொண்டே வந்தார்கள். சிலர் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அவை ஒவ்வொன்றும் அவரவர் தகுதியைக் காட்டிக் கொண்டே இருந்தன. நான் மிகப் பொறுமையாக அவர்களின் அறிவுக்குப் புள்ளி போட்டுக் கொண்டேயிருந்தேன். ஏன் நீங்கள் கூட எளிதாகப் போடலாம் அவர்களின் கேள்விகளும் இவை தான்...

"வரியெல்லாம் இன்னமே இருக்காது இங்கிறாங்களே,

நிசமாங்க?"

"மணி அடிச்சாத்தான் வண்டி வருமுங்கிறாங்களே,

எப்படிங்கோ?"


இப்படி இவர்கள் கேளாதிருந்தால், அவர்களது அறிவிற்குப் புள்ளிபோட நம்மால் இயலுமா? அவர்களது கேள்விகள் தானே அவர்களது அறிவை நமக்குக் காட்டிக் கொடுத்தது. அந்த வண்டியிலேயே எதுவும் பேசாமல் பயணம் செய்து வந்தவர்கள் இருவர். வண்டி நின்றதும் அவர்களில் ஒருவரை அணுகி, "ஐயா, தாங்கள் எந்த ஊர்? என்ன வேலை? எங்குச் செல்லுகிறீர்கள்?" என அன்பாகக் கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து புன்சிரிப்பு மட்டுமே வெளி வந்தது. நான் அவரது அறிவுக்கு 100 புள்ளிகள் குறித்துக்கொண்டு மிகவும் மரியாதையுடன், "நீங்கள் தமிழகத்திற்கு ஒரு வழிகாட்டி, மிகவும் நன்றி" எனக் கூறிக் கொண்டிருந்தேன். உடனே பக்கத்தில் இருந்தவர் "ஏய்யா இந்தத் தொந்தரவு? பேசாம ஊருக்குப் போய்ச் சேருங்கய்யா. அவர் ஊமை" என்றார். அவர் எனது அறிவுக்கு எத்தனை புள்ளி போட்டிருப்பாரோ தெரியாது. ஆனால், எனது அறிவுக்கு என்னால் ஒரு புள்ளியும் போட முடியவில்லை. நானும் இக்கேள்விகளைக் கேளாமல் பயணம் செய்திருக்கக் கூடாதா? என எண்ணி வெட்கினேன்.

கேள்வி கேட்பதற்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்கு விடை அளிப்பதற்குக்கூட பொறுமை வேண்டும். விடை கூறுமுன் விழிப்பாகவும், விடை கூறுவது சுருக்கமாகவும் இருக்க வேண்டும். செல்வத்தைச் சேமித்து வைப்பது போல, சில பெரியவர்கள் அறிவையும் அனுபவத்தையும் சேமித்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பெற விரும்பி வருபவர்களுக்குத் தகுதியறிந்து அளவோடு சிறிது வழங்குவது "கொடைத்தன்மை" எனவும், அதையும் வழங்க மறுப்பது "கருமித்தனம்" எனவும் கருதப்பெறும் ஆனால், அந்த விடை எவருக்கும் தீமை பயவாததாக இருத்தல் வேண்டும்.

ஒருவன் உன்னிடம் வந்து, "அவன் பணம் தர மறுக்கிறான். கோர்ட்டில் வழக்குப் போடலாமா?" என ஒரு கேள்வி கேட்பான். போடு என்றாலும், வேண்டாம் என்றாலும் இரண்டு விதமான துன்பங்கள் வந்து சேரும். அதுவும் அவனிடமிருந்தும், அவனது எதிரியிடமிருந்தும் பல உரு வெடுத்து வரும். இறுதியில் அவைகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை உனக்கே ஏற்பட்டுவிடும். ஆகவே, இப்படிப் பட்ட சமயங்களில் உனது விடை "நன்றாக யோசித்துச் செய்யுங்கள்" என்றிருப்பது நன்மை பயப்பதாக விருக்கும்.

கேள்விகளுக்கு விடையளிப்பதில் வக்கீல்களும் டாக்டர்களும் மிகுந்த விழிப்பாக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு உண்மை தெளிவாகத் தெரிந்திருந்தாலும், அவற்றை வெளிப்படையாகக் கூறாமல் சிறிது சுற்றி வளைத்துக் கூறுவதே நலமாகவிருக்கும். "உயிர் போய் விடும்" எனக் கூறிய கேஸ்கள் பிழைத்துக் கொண்டதால் கெட்டுப்போன டாக்டர்களும், "தோற்றுப் போகும்" எனக் கூறிய கேஸ்கள் வெற்றிபெற்றதால் அழிந்து போன வழக்கறிஞர்களும் பலருண்டு.

கேள்வி கேட்டு அறிவதைவிட, கேளாமற் கேட்டு அறிவதைவிட, கேள்விக்கு விடை கூறுவதைவிட, எதையும் எவரிடமும் பேசாமலிருக்கப் பழகிக் கொள்வதே மிகவும் நல்லதாகும். ஏனெனில், குறைவாகப் பேசுகிறவர்களையே அறிவாளிகள் விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்றைய தினம் உ ய ர் ந் த அறிஞர்களாகவும், சிறந்த செயலாளர்களாகவும் உள்ள தலைவர்ளெல்லாம், குறைந்த பேச்சு உடையவர்களாகவே காணப்படுகிறார்கள்.

வாய்க்கு இரண்டைக் கதவுகள் இருப்பது ஏன் தெரியுமா? எப்போதும் முடி வைப்பதற்கு. காதுகளுக்குக் கதவு களே இல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா? எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதற்கு! வாய் ஒன்றும், காது இரண்டுமாக அமைந்திருப்பது ஏன் தெரியுமா? குறைவாகப் பேசு, அதிகமாகக் கேள் என்பதற்கு!

காதுக்கும் வாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாய் நல்லதைச் சொல்ல வேண்டுமானால், காது நல்லதைக் கேட்டிருக்கவேண்டும். வாய் வணக்கமாக இன்னுரைகளைக் கூற வேண்டுமானால், காது இணக்கமாக நல்லுரைகளைக் கேட்டிருக்க வேண்டும். அதிகம் கூறுவானேன், காதால் கேட்க முடியாத போது வாயால் பேசவே முடியாது எனக் கூறிவிடலாம்.

ஆகவே, கேள்விச் செல்வத்தைப் பெறு; அதையும் கேளாமற் கேட்டுப் பெறு. கேட்டுத்தான் பெறவேண்டும் என்ற நிலை வந்துவிட்டால் மெதுவாகக் கேள். அதையும் கற்றறிந்த மக்களிடம் மட்டுமே கேள். அதிலும் ஒழுக்க முடையவர்களிடம் மட்டுமே கேள். அவர்களிடமிருந்து வருகின்ற விடையானது, சேற்று நிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கின்றவனுக்கு ஊன்றுகோல் துணை செய்வதுபோல, உன் வாழ்க்கைப்ப் பாதையில் வழுக்காது நடக்க உயர்ந்ததோர் ஊன்று கோலாக நின்று உதவும்.

எப்பொழுதும் நல்லவைகளைக் கேள்; அல்லது எவ்வளவாவது நல்லவைகளைக் கேள். அவ்வளவு உனக்குச் சிறப்பும், உயர்வும் உண்டு. "எனைத்தானும் நல்லவை கேட்க" என்ற குறளை எப்போதும் சொல்லிக் கொண்டிரு.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் தமிழினம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=2._கேள்விச்_செல்வம்&oldid=1347496" இருந்து மீள்விக்கப்பட்டது