உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறு செல்வங்கள்/அருட் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து
(3. அருட் செல்வம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

3 அருட் செல்வம்




செல்வம் இருவகை. ஒருவகை கண்ணாற் கண்டு மகிழ்வது. மறுவகை மனத்தால் எண்ணி மகிழ்வது. முன்னது நிலம், நீர், பொன், மணி, பொருள் போன்றவை. பின்னது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், அருள் போன்றவை.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

என்பது வள்ளுவர் வாக்கு. "செல்வங்களில் மிக உயர்ந்த செல்வம் அருட் செல்வமேயாம்; ஏனெனில் பொருட் செல்வம் அறிவற்ற கீழ்மக்களிடத்தும் உள்ளத"' என்பது இதன் .பொருள். அருட் செல்வமானது மேன்மக்களிடத்தில் மட்டுமே காணப்படும் என்பது கருத்து.

அன்பும் அருளும் ஒன்றல்ல, அன்புக்கும் வேறானது அருள். 'அருளொடும் அன்பொடும்' என்ற தொடர் இதனை மெய்ப்பிக்கும் எனவும், அன்புடைமை பற்றிக் கூறிய வள்ளுவர் பின் அருளுடைமை பற்றியும் கூறியிருப்பதே இதற்குச் சான்றாக அமையும் எனவும் சிலர் கூறுவர்.

அன்பும் அருளும் ஒன்றே. இவை இரண்டும் இரக்கமற்ற உள் ள த் தி ல் தோன்றுவதில்லை. இவை கருணை என்ற ஒரே பொருளைக் குறிப்பன என்பர் வேறு சிலர்.

மேற்கண்ட இரு கூற்றுக்களிலும் உண்மை இல் லாமல் இல்லை. அன்பும் அருளும் உண்மையில் வேறாக இருந்தும், அவை ஒன்று போலவே காட்சியளிக் கின்றன.

அன்பு என்பதும் அருள் என்பதும் மக்கள் உள்ளத்தே இளகி விளையும் ஒன்றேயாம். எனினும் அவை இடவேறு பாட்டாலும் நிலை வேறுபாட்டாலும் தகுதி வேறுபாட்டா லும் பெயர் வேறுபடுகின்றன. விளக்கம் கூறவேண்டு மானால், தொடர்புடையாரிடத்துத் தோன்றுவது அன்பு எனவும், பிரிடத்துத் தேரின்றுவது அருள் எனவும், சிறியோரிடத்து விளைவது அன்பெனவும், பெரியோரிடத்து விளைவது அருள் எனவும், இல்லறத்தில் காணப்படுவது அன்பெனவும், துறவறத்தில் காணப்படுவது அருள் எனவும் கூறலாம். இதனையே அன்பு நெறி என்றும் அருள்நெறி என்றும் கூறுவர். திருக்குறளில் அன்பு 24 இடங்களிலும், அருள் 18 இடங்களிலும் காணப் படுகின்றன. அன்பு பற்றுதலையும். அருள் இரக்கத்தையும் குறிக்கும். அன்பை மனிதத் தன்மையின் மீதும், அருளைத் தெய்வத் தன்மையின் மீதும் ஏற்றிக் கூறுவதுண்டு.

இறைவனிடத்திலிருந்து மக்கள் வேண்டுவது அன்பு அல்ல; அருளையே. அது பேரருளாகவும் பெருங்கருணை யாகவும் காட்சியளிக்கும். இதனை "அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை என்ற வள்ளலாரின் வாக்கு மெய்ப்பிக்கும். அவர் கண்டுகொண்ட தெய்வம் “பேரருள் ஒளி', 'பெருங்கருணை வடிவு” என்பது இதன் பொருள்.

ஒருவரையொருவர் அடித்துத் துன்புறுத்துவது விலங்குக் குணம். தன்னலம் கொண்டு உயர்ந்து செல்வது பறவைக் குணம். தீமை செய்தவர்க்குத் தீமை செய்வது தேள், பர்ம்புக் குணம். தீமை செய்யாதவர்க்கும் தீமை செய் வது பேய்க்குணம். தீமை செய்தவனை மன்னித்து அதை மறந்து அவனுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பதே மனித குணம் இவற்றையெல்லாம் கடந்து தீமை செய்த வர்க்கும் நன்மை செய்வதே தெய்வ குணம் என்றாகும், இந்தக் குணமே அருட் செல்வம் எனப்பெறும்.

பொருட் செல்வம் பெறுவது அரிது. அருட் செல்வம் பெறுவது எளிது. பொருட்செல்வம் பெறப் பல ஆண்டுகள் வேண்டும். அருட்செல்வம் பெறச் சில வினாடிகளே போதும். பொருட்செல்வம் உழைத்துப் பெறுவது. அருட் செல்வம் நினைத்துப் பெறுவது, பொருட் செல்வம் கையால் எண்ணிப் பெறவேண்டிய ஒன்று. அருட் செல்வம் மனத் தால் எண்ணிப் பெறவேண்டிய ஒன்று. ஆகவே தம்பி! நீ அருட் செல்வத்தைப் பெற விரும்பு அதைப் பெற்று அருட்செல்வனாக விளங்க ஆசைப்படு மிக எளிதாகப் பெறக்கூடிய இவ்வுயர்ந்த செல்வத்தை நீ ஒருபோதும் இழந்துவிடாதே.

"என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதும், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதும், "எவ்வுயிரும் பராபரனின் சந்நிதியாகும்" எ ன்பது ம் நமது முன்னோர்களின் வாக்கு. ஆகவே பிறரை உன்னைப் போன்று நினை! அவர்களை வாழவைத்து வாழ்! அவர்கள் வாழ்வதற்காகவே வாழ்!

உன்னைப்போன்ற மக்களை உடன்பிறந்தவர்களாகக் கருது. ஜாதி கருதி, பிறப்பினால் உயர்வு தாழ்வுகளை எண்ணி வெறுத்து ஒதுக்காதே! ஒதுக்கினால் நீ அருட் செல்வத்தை இழந்துவிடுவாய்.

மக்களாகப் பிறந்தவர்களில் வறுமையாளரே பெரும் பான்மையோர். அவர்களிற் பலர் நீ வாழும் நாட்டில், ஊரில், தெருவில், அருகில் இருப்பவர்கள் அவர்களை ஏழைகள் என்றெண்ணிக் குறைவாக மதித்து எள்ளி நகையாடாதே. அவர்களிலும் நீ உயர்ந்தவன் என எப்போதும் நினையாதே. நினைத்து விட்டால் அப்போதே உன்னை அருட்செல்வம் இழந்துவிடும்.

அறிவால், ஆற்றலால், உடலால், வலிமையால், பொருளால், பிறவற்றால் உன்னைவிட மெலிந்தவர்களைத் தாக்காதே! தாக்கும் நிலை வந்தால் உன்னைவிட வலிமை வாய்ந்தவர்கள் உன்னைத் தாக்க வருவதாக நினை. அப்போது உன் மனம் என்ன பாடுபடுமோ அதனையே அந்த ஏழ்மை மனமும் படும் என நினை. உடனே அருட் செல்வத்தைப் பெறுவாய். இன்றேல் அதை நீ இழந்து விடுவாய்!

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் விலகிப் போய் விடாதே! நெருங்கு அவர்கட்கு உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை எண்ணிப் பார் உடலாலோ, பொருளாலோ, சொல்லாலோ உதவிசெய்ய முடியுமானால் துணிந்து செய்! விரைந்து செய்! முடிந்தவரை செய்! உன்னால் முடியாதிருக்குமானால் அதற்காக வருந்தி ஒரு சொட்டுக் கண்ணிராவது விடு. உள்ளத்தில் அருட்செல்வம் பிறக்கும் முகத்தில் அருள் ஒளி வீசும்! நீ அருட்செல்வனாகத் திகழ்வாய்!

யாரோ, எவரோ ஒருவர் வண்டியில் அடிபட்டுக் கிடக்கிறார் என்று வழிநெடுகச் சொல்லிக் கொண்டு போகாதே! அடிபட்டுக் கிடப்பவரை உன் உறவினனாக உடன்பிறந்தவனாக, அல்ல நீயே அடிபட்டுக் கிடப்பதாக எண்ணு! அப்போது உனக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது புலப்படும். அதை உடனே செய். நீ அவர்களை வருந்தித் தழுவு! அருட்செல்வம் உன்னை மகிழ்ந்து தழுவும்.

சொற்களில் தீச்சொல், சுடுசொல். கடுஞ்சொல், கொடுஞ்சொல் எனப் பலவகையுண்டு, அவைகளைச் சொல் வதற்காகத்தான் நாக்குப் படைக்கப் பெற்றிருக்கிறது என நினைத்துவிடாதே! அதனால் கடுமையும், கொடுமையும், தீமையும் விளையுமேயன்றி நன்மை விளைவதில்லை. இவ் வுண்மையை அச்சொற்களின் பெயர்களே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன! இத் தீச்சொற்களை எளியவரிடத் தும், வலியவரிடத்தும் சொல்லாதிருப்பது நல்லது. "இன் சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாது' என்பது நல்லறிஞர்களது வாக்கு. கடப்பாரைக்குப் பிளவுபடாத கருங்கற்பாறை பசுமரத்தின் வேருக்குப் பிளவுபட்டுவிடும் என்பது நாம் கண்டுவரும் உண்மை, வெற்றி தீச்சொல்லில் இல்லை; தீஞ்சொல்லில் உள்ளது. தீச்சொல் அருட் செல்வத்தை அழிக்கும்; தீஞ்சொல் அருட் செல்வத்தை அளிக்கும்.

வேட்டையாடுதல் சிலருக்குப் பொழுது போக்கு. ஆனால் விலங்குகளுக்கோ அது உயிர்ப்போக்கு. சிலர் இதை வீரம் என்பர். துப்பாக்கி கொண்டு, அதுவும் தூரத்தில் மறைந்து நின்று சுடுகிறவர்களைக் கண்டால் வீரம் தொலை தூரத்தில் போய் நின்று நகைக்கும். சில சமயம் எதிரில் வந்தும் பழிக்கும். மடியில் பால்சுரக்க மனத்தில் குட்டியை நினைத்து ஓடுகின்ற மானைச் சுட்டு வீழ்த்த எண்ணும் மனம் நன்மனமல்ல. அது கல்மனம். உள்ளத்திலே குஞ்சை நினைந்து வாயிலே இரையைக் கல்வி விண்ணிலே பறந்து செல்லும் பறவைகளின் இறகிலே சுட்டு வீழ்த்தப் பார்ப்பவன் கண்களும் கண்களல்ல; அவை புண்கள். அருள் ஒளி அற்ற கண் கண்ணல்ல; அது புண் எனப்பெறும். நீ இத்தவறைச் செய்து உன் கண்களைப் புண்களாக்கிக் கொள் ளாதே! உன் உயிர் போன்று பிற உயிரையும் நினை! உன் கண்களில் அருள் ஒளி வீசும்!

"ஊனைத் தின்று ஊனை பெருக்காமை முன்னிதே' என்பது இனிது நாற்பதில் ஒர் அடி.

தன்னுாள் பெருக்கற்குத் தான் பிறிநூண் உண்பான் எங்ங்ணம் ஆளும் அருள்

என்பது திருக்குறளில் ஒரு குறள். உன் சதை பொருகு வதற்காகப் பிற உயிர்களின் சதையைத் தின்பது நல்லதல்ல என்பது கருத்து. ஆட்டின் குடலை, கோழியின் தொடையை, மீனின் தலையைத் தன் முன்னே வைத்து உண்ண வாயைத் திறப்பவன் உள்ளத்தை எப்படி ஆளும் அருள்? ஆளாது. அப்படியே மாளும் அது.

மக்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் மட்டுமல்ல, செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பது மெய்ப்பிக்கப் பெற்றுவிட்டது. வருந்திய முல்லைக் கொடி வாடாமல் படர்வதற்கு ஊர்ந்து சென்ற தேரையே கொடுத்து உளமகிழ்ந்தவன் பாரி. 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்பது அருட்சோதித் தெய்வத்தை ஆண்டுகொண்ட தெய்வமாகக் கொண்ட அருட்பிரகாச வள்ளலின் வாக்கு, பயிரைக் கண்டு வாடிப் பழகிவிட்ட உள்ளம், உயிரைக் கண்டு வர்டி உயிர் கொடுக் கவும் முந்தும். ஆம் வாடிப் பெறுஞ் செல்வமே வளரும் அருஞ் செல்வமாகும்.

இறைவன் "அருள் ஒளியினன். அருள் வடிவினன்.' அவன் அருளே கண்ணாகக் கொண்டு கண்டு, 'அனருவளாலே அவன்தாள் வணங்கி, 'அவனது திருவருளைப் பெற வேண்டும் அதற்கு அன்பு நெறியும் அருள் நெறியும் பெருந் துணை செய்யும்.

ஒருவன் பெற்றுள்ள செல்வங்கள் அனைத்தும் பெருகி வளர்ந்து, பயனுற்று, சிறப்புற்று விளங்க வேண்டுமானால், அவன் அருட்செல்வத்தையும் பெற்றிருக்க வேண்டும் இன்றேல் அவன் எத்தகைய செல்வத்தைப் பெற்றிருப்பினும் அவன் அதனால் பயன் பெறான். கோழையின் கைகளில் வாள் போய்ச் சேராது; சேர்ந்தாலும் கொடியவன் உள்ளத்தில் அருள் போய்ச் சேராது.

வாழ்ந்து பெறும் செல்வம் கிழட்டுச் செல்வம்; ஆழ்ந்து பெறும் செல்வம் சிந்தனைச் செல்வம். நடந்து பெறும். செல்வம் திருச்செல்வம். உழைத்துப்பெறும் செல்வம் உடற்செல்வம். முயன்று பெறும் செல்வம் பொருட் செல்வம். மகிழ்ந்து பெறும் செல்வம் மக்கட் செல்வம். வருந்திப் பெறும் செல்வம் கல்விச் செல்வம். பெற முடியாத செல்வம் தாய்ச் செல்வம். அருட் செல்வமோ உழைக்காமல் வருந்தாமல் நினைத்தே பெறுகின்ற பெருஞ்செல்வமாகும் இதனாலேயே 'இது செல்வத்துட் செல்வம்' எனப்பெறுகின்றது. ஆகவ்ே தம்பி நீ அருட் செல்வத்தை வழங்கி அருட் செல்வனாக விளங்கு!

வாடிய பயிரைக் கண்டு வாடிய உள்ளம் அன்றே
தேடிய செல்வம் ஒன்று அதுதிரு அருளாம் செல்வம்

வாழட்டும் தமிழகம்!