உள்ளடக்கத்துக்குச் செல்

மருமக்கள்வழி மான்மியம்/கருடாஸ்‌திரப்‌ படலம்‌

விக்கிமூலம் இலிருந்து
(7.கருடாஸ்திரப் படலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

7. கருடாஸ்திரப் படலம்

என்று மருமகன் இயம்பிய மொழிகளை
மாமன் கேட்டு, மனமிக நொந்து,
"நல்ல தப்பா! நாகாஸ் திரங்கள்
இத்தனை தானோ? இனிவே றுண்டோ?
உன்னைச் சொல்ல ஒருகுறை யில்லை. 5
கலியன் முற்றின காலமி தல்லவோ?
என் மாமனார் இறந்து வருஷம்எட்டாக
யான்படும் பாடெலாம் யாரே அறிபவர்!
நாலாண் டாக நல்ல விளைவிலை;
செலவு கழிந்ததே தெய்வச் செயலாம்; 10
அடைமழை யாலே அழிந்ததோர் வருஷம்;
வெயிலின் கொடுமையால் வெந்ததோர்
போன ஆண்டில் பொலியே இல்லை. [வருஷம்;
கொக்குநோய்[1] விழுந்து குடியைக் கெடுத்தது;
கார்விளை வில்லை, பசானம் கரிந்தது;[2] 15
விளைவிலை யாயினும் வீட்டுச் செலவில்

ஒருகுறை யேனும் உண்டோ? அப்பா!
பிள்ளைப் பேறும் பிறந்த நாளும்
இல்லா வருஷம் இல்லையே, அப்பா!
குடும்பச் செலவுகள் கூறி முடியுமோ? 20
ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா?
ஆண்டு தோறும் ஆலடி மாடன்[3]
கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும்?
போன கொடைக்குப் புதிதாய் வந்த
வில்லுக் காரி[4] வீரம் மைக்கு 25
நாலு சேலையும் ரூபாய் நாற்பதும்
கொடுத்தது நீயும் கூடி யல்லவா?
எனக்கு,
சல்லடம் கச்சை தைக்க மாத்திரம்
ஐம்பது ரூபாய் ஆச்சுதே, அப்பா! 30
போக்கில் லாத பயல்களைப் போலத்
துணியை அரையில் சுற்றிக் கொண்டு
நானும் ஆடினால் நன்றா யிருக்குமா?
காரணவன் என்றொரு கணிசம்வேண் டாமா?
பிலே![5] 35
சன்னதி முன்னே தறித்த கடாவுக்கு
இருபது ரூபாய் எண்ணிவைத் தேனே!
நீங்கள்,
அப்பன் மக்கள் அனைவரும் இங்கே

இருந்து தின்றது போதா தென்று, 40
கொடியிறைச் சிகளும்[6] கொண்டு போனீரே?
இந்தச் செலவுகள் ஏற்படு வதனால்
மாடனை வணங்கா திருக்க லாமா?
கடன்பட் டாயினும் காலா காலத்தில்
வேண்டும் காரியம் செய்யவேண் டாமா? 45
கொடைஓ ராண்டு கொடுக்க முடங்கினால்
குடும்ப தோஷமும் குறையும் வராதோ?
அடே!
ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு
ஆயிரம் பணமா? ஆறா யிரம்பணம் 50
என்று சொல்லவுன் வாய்க்கிய லாதோ?
பந்தல் இல்லையா? பாடை இல்லையா?
பறைமே ளங்களும்[7] பாட்டும் இல்லையா?
நாலு தெருவும் நடைமாற் றில்லையா?[8]
காள மில்லையா, கருங்கொம் பில்லையா? 55
களியல் கூத்தசை கம்புகள் இல்லையா?[9]

முரசு வாத்திய முழக்க மில்லையா?
என்ன இல்லை என் தாய்க் கப்பா?
தோசை ஆயிரம் சுட்டு மூலையில்
ஆசை தீரவைத் தழுத தில்லையா? 60
பத்துச் சாக்குப் பயறும் ஒன்றாய்
அடுத்த கிழமையில் அவிக்க வில்லையா?
தேங்காய்,
இரண்டா யிரத்துக் கதிகம் எடுத்து
வீடு வீடாய் விளம்ப வில்லையா? 65
பதினா றன்று, பார்ப்பார்க் கெல்லாம்,
பட்டுக் குடையும் பாத ரட்சையும்
கட்டிலும் மெத்தையும் கடுக்கன்மோ திரமும்
பாயச பாத்திரம் பஞ்சபாத் திரமும்[10]
அமுது படியும் அளிக்க வில்லையா? 70
மேலும்
பசுவும் கன்றும், பத்து மரக்கால்
நிலமும்,[11] தானம் நெறிதவ றாமல்
செய்ய வில்லையா? தினமும் வெற்றிலைச்
செலவும் உனக்குத் தெரியா தோடா? 75
படிப்புரை[12] யருகில் வைத்த படிக்கம்
பத்திர காளி பலிபீ டம்போல்
ஆனதை நீயும் அறியா யோடா?

பத்துப் பெண்கள் பட்டினி கிடந்து
பருத்திப் பொதிபோல் பதினா றாம்நாள் 80
வெளியில் வந்திட வேண்டு மானால்.[13]
அவர்,
எத்தனை தோசை இட்டலிக் கெல்லாம்
ஏம காலரா யிருப்பார்? அப்பா!
இட்ட செலவெலாம் எடுத்துச் சொன்னால் 85
எண்ணி முடியுமா? எழுதி முடியுமா?
சிதம்பரக் கட்டளை, செந்திற் கட்டளை,
மதுரைக் கட்டளை[14] வகைக்கொரு பூவில்
எண்பது கோட்டை[15] நெல்லில் உழக்குக்

குறைந்த தானால் கொடுக்க முடியுமா? 90
பேயும் அஞ்சும் பெரும்ப ழஞ்சி
ஐய னிடத்தில் ஆண்டு தோறும்
கொண்ட கடனைக்[16] கொடுக்கா விட்டால்,
அவர், வயிற்றை ஊத வைத்திடு வாரே!
குறளியை[17] ஏவிக் கொன்றிடு வாரே! 95
நினைத்தி ராமல் நிதமும் எத்தனை
செலவுகள் வந்திடும், தெரியுமா உனக்கு?
'சானல் வாச்சர்'[18] சந்தனத் தேவர்க்கு
'அட்ரஸ்'[19] கொடுத்த வகைக்கோ ராறு

ரூபாய் இன்று ரொக்கம் கொடுத்தேன். 100
இனி,
இந்த மாதம் இருபதாம் தியதி
'கார்டர்'[20] அண்ணன் காடு மாறிப்
போகிறார், அவரைச் சும்மா போகச்
சொல்ல லாமோ? சொல்நீ அப்பா! 105
இப்படி யிப்படி இன்னும் செலவுகள்
எத்தனையோ வரும்; எண்ணில் அடங்குமோ?
உழவன் மீதி உழவுக் கம்பென
உலகம் சொல்வதும் உண்மை அல்லவோ?
பிலே! நீ, 110
ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தையே,
ஏ,பி,ஸி,டி எழுதத் தெரியுமா?
எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்!
எல்லாம் பாழுக் கிறைத்த நீர்போல்
ஆக்கி விட்டாயே, அவலட்சணமே! 115
அந்தச்
சாஸ்தாங் கோவில் சாந்தி அய்யர்
மகனுக் கெத்தனை வயது காணும்?
அவன்,
படித்து. பீ. ஏ. பாசாய்", நல்ல
பதவியி லிருப்பதைப் பார்க்க வில்லையா? 120
உண்மை, உண்மை! ஒருதடை யில்லை.

பட்டினி கிடந்து படிப்பவர் மட்டுமே
பரீக்ஷை தேறுவர், பட்டமும் பெறுவர்!
அன்றி, 125
ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்,
போளிக் காகப் புத்தகம் பணயம்,
சீடைக் காகச் சிலேட்டுப் பணயம்,
முறுக்குக் காக மோதிரம் பணயம்,
காப்பிக் காகக் கடுக்கன் பணயம், 130
'காலரு'க் காகக் காறை பணயம்,
கூத்துக் காகக் குடையும் பணயம்.
இப்படி யாக, எல்லாம் பணயம்
வைத்துத் தின்னும் வயிற்றுக் கள்வர்
வாழ்ந்திடு வாரோ? வாழ்ந்திடு வாரோ? 135
முருக்குத் தடிபோல்[21] வளர்ந்தமுட்டாளே!
நீ, பணயம் வைத்த பண்டம் அனைத்தும்
எத்தனை தரம் நான் மீட்டி யெடுத்துத்
தந்தேன், அப்பா! தந்தேன் அப்பா!
அடே, 140
ஆறு வருஷமாய் "ஐக்கோர்ட்' வரையும்
வழக்குப் பேசிஎன் மாமனா ருக்குப்
பணம் கடன் கொடுத்த பயல்களை எல்லாம்
பஞ்சாய்ப் பறத்தின பாதர் சிங்கமாம்[22]
என்னையும் குடும்ப தோஷி என்றுநீ 145
சொல்ல வந்தாயே! சொல்ல வந்தாயே!

விலைக்கு விற்ற விளையை மைனர்
வியாச்சியம் செய்து, மீட்டினது உன்தன்
அப்பனா? நானா? ஆரடா? சொல்லு.
அன்பாய்ப் பேசும்உன் அப்பனால் உனக்கு 150
அரைக்கா சுக்கோர் ஆதாய் முண்டோ?
மூத்த
காரணவர் பெற்ற கன்றுகள்[23] கூடி
ஆயிரம் ரூபாய்க்கு ஆவ லாதி[24]
வைத்ததை நீயும் மறந்தா யோடா? 155
அந்த
உகந்துடை மைப்பணம் ஒன்றும் அவருக்கு
இல்லா தாக்க என்னபா டெல்லாம்
பட்டேன் அப்பா! பார்த்தது மில்லையோ?
குசும்பன் சாமியும், குண்டுணிச் சுப்புவும், 160
உன்,
அப்பனும் கூடி ஆலோசனைகள்
செய்த தெல்லாம் தெரியும், தெரியும்!
அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவரைக்
காட்டச் சொல்போ, காட்டச் சொல்போ! 165
கோர்ட்டில் வியாச்சியம் கொடுக்கச்சொல்போ!
'செருப்பா லடித்தா செலவுக்கு வாங்குவார்?'
வாங்கட்டும், வாங்கட்டும்! வட்டிமுடையட்டும்!
நாஞ்சி னாட்டுக்கு நன்மையுண் டாகட்டும்!
இளியுள காலம் எக்கா ரணவனும் 170
காடும் மேடும் கரையும் சுற்றி,

ஊணும் உறக்கமும் இன்றி உழைத்து,
விளையும் விளைவெலாம் வீசித் தூற்றி,
ஈரமும் பதரும் இல்லா தகற்றி,
சாக்கில் அளந்து தலையில் எடுத்து, 175
மாதா மாதம் மருமகன் ராஜா
திருவுளங் கொண்டெழுந் தருளி யிருக்கும்
கோட்டா ரத்தில்[25] கொண்டு சென்று,
அவர்,
குறட்டைச் சுருதியில் கும்ப கர்ணப் 180
படலம் அன்பசய்ப் பாரா யணம்செயும்
காலமா யிருந்தால் காத்து நின்று, அல்லது,
நடுமனை கீறி 'நாயும் புலியும்'[26]
இஷ்டர்கள் கூட இருந்தி ழுக்கும்
வேளையா யிருந்தால் விலகிநின்று, அல்லது, 185
புகையிலை வாயிற் போட்டுக் கொண்டு
பொடியும் மூக்கில் ஏற்றிக் கொண்டு
'இறக்கு, வெட்டு' என இரைந்து கொண்டு
இடையிடைச் சண்டையும் எழுப்பிக் கொண்டு
பக்க மந்திரிகள் பலரொடும் சீட்டுக் 190
கச்சேரி செய்யும் காலமா யிருந்தால்
ஓரிடம் மாறி ஒதுங்கி நின்று
தாயப் போர்க்கொரு[27] தடைசெய் யாமல்,

குடித்தன மில்லாக் குறிகள் அறிந்து,[28]
தடித்தன மில்லாச் சமயம் பார்த்து. 195
'அரசே! பெருந்திரு அமுதுக்[29] காக
இம்மா தத்துக்கு ஏற்படும் நெல்லிதை
அளந்து களஞ்சியத்து ஆக்கிடக் கற்பனை
பாலித் தருள்வீர்' என்று பணிந்து
நிற்கும் படிக்கு நீயும் 'கோர்ட்டு'த் 200
தீர்ப்பைப் பெற்றுச் சீக்கிரம் வா, போ!
உள்ளநா ளெல்லாம் உங்கட் காகநான்
உழைத்தது இந்த ஊர் அறியாதோ!
பெண்டாட் டிக்கும் பிள்ளை கட்கும்
இத்தனை நாளாய் எத்தனை கொடுத்தேன்? 205
உண்ணச் சோறும் உடுக்கத் துணியும்
கொடுத்தால் என்ன குறைவாய் விடுமோ?
அடிமைகள் போல்இவர் அத்தனை வேலையும்
செய்வதும் உனக்குத் தெரியா தோடா?
'வயலைப் பார்த்து வா' எனில், 'கிழட்டுப் 210
பயலே! உனக்குப் பயித்தியம்' என்பாய்!
'கொத்தை[30] அளந்து கொடு' என் றால்,நீ
வைத்த ஆளோ? மாட்டேன்' என்பாய்!
போன பூவில் புளியடிச்[31] சூடு

வட்டம் தள்ளி[32] வரும்போது உன்னிடம், 215
'களத்தில் சென்று கண்காணி' என்றேன்;
அந்தப் படியே அவ்விடம் சென்று நீ
நிமிஷப் பொழுதில் நெல்அரைக் கோட்டை
கடத்தி விட்ட கதையும் எனக்குத்
தெரியா தோடா? திருட்டுப் பயலே! 220
மறுநாள்,
விடியற் காலம் விசாரிப்புக் காரன்
சாக்கும் இருபதாம் நம்பர் 'ஷாப்பில்'[33]
இருந்தது கண்டுவந்து என்னிடம் சொன்னான்;
வெளியில் சொன்னால் வெட்க மல்லவோ? 225
ஊரும் நாடும் ஒன்றாய்ச் சிரிக்குமே!'
என்று பேசாது இருந்த விட்டேன்.
அடே,
செப்பில் கிடந்த திருக்குப் பூ, அன்று
எப்படி இறங்கி இரண்டாம் குடியாள்[34] 230
கொண்டையில் சென்று குடியே றியது?
என்னைக் குடும்ப தோஷி யென்று
கூற உனக்குவாய் கூச வில்லையோ?

குடும்பத் துக்கொரு குறையும் வராமல்
காரியம் பார்க்கும் கார ணவர்களில், 235
எல்லா வகையிலும் என்னைப் போல
நல்லவர் இந்த நாஞ்சில் நாடு
பன்னிரண்டு படாகையில்[35] உண்டோ?"
என்று வீரம் பேசி எழுந்தனர்.


  1. 14. கொக்குநோய் - நெற்பயிருக்கு ஏற்படும் ஒருவகை நோய்.
  2. 15. கார் - ஆவணி புரட்டாசி மாதங்களில் விளையும் நெல். பசானம் மாசி பங்குனி மாதங்களில் வினையும் நெல்.
  3. 22. ஆலடி மாடன் கொடை -ஆலமரத்தினடியிலுள்ள மாடன் என்னும் சிறு தெய்வத்துக்குச் செய்யும் சிறப்பு.
  4. 25. வில்லுக்காரி: வில்லுப் பாட்டுப் பாடுபவள். வில்லுப் பாட்டுப் பாடும் ஆண்களைப் புலவனார் என்று அழைத்து வருகின்றனர்.
  5. 25. பிலே - பயலே
  6. 41. கொடி இறைச்சி - ஆட்டிறைச்சி முதலியவற்றைக் கெடாமல் காப்பதற்காகக் கயிற்றில் கோத்து வெயிலில் உலர்த்துவதுண்டு. இப்படி 'கொடி'யில் உலர்த்தினமையால் 'கொடியிறைச்சி' என்ற பெயர் வந்தது.
  7. 53. பறைமேளம்: பறையர் அடிக்கும் தப்பட்டை.
  8. 54. நடைமாற்று: நடத்தற் பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை
  9. 56. களியல் (கழியல்) - கோலாட்டம்; வயதானவர்கள் இறந்தபோது பறையர் முதலியோர் சிறுகோள்களைக் கையில்
    வைத்துக்கொண்டு பிரேதத்தின் முன்னே ஆடிப்பாடிக் கோலாட்டம் அடித்தல் வழக்கம். கூத்து: இந்தச் சந்தர்ப்பத்தில் வேஷம் போட்டுக்கொண்டு ஆடுதல். அசைகம்பு- சிலர் நீண்ட கழைகளைக் கையில் ஏந்தி அவற்றை அசைத்துப் பாடி ஆடுகிற வழக்கமுண்டு. இந்தக் கழைகள் அசைகம்பு
    எனப்படும்.
  10. 69. பஞ்சபாத்திரம்: அகன்ற வாயுள்ள தீர்த்தப் பாத்திரம்.
  11. 72-73. பத்துமரக்கால் நிலம்: ஒரு ஏக்கரை ஒரு கோட்டை விதைப்பாடு என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. ஒரு கோட்டை இருபத்தொரு மரக்கால்.
  12. 76. படிப்புரை - ஒட்டுத் திண்ணை.
  13. 78-81. யாராவது ஒருவர் மரணமடைந்தால் இறந்தவருடைய பந்துக்களில் சில பெண்கள் பதினாறு நாளும் பட்டினி கிடப்பார்கள். இந்தப் பட்டினிக் காலத்தில் சோற்றைத் தவிர மற்றெல்லாப் பண்டங்களையும் உபயோகிப்பதில் ஆட்சேபணையில்லை. ஆதலால் சில பெண்கள், பண்டம் பலகாரம் ஏராளமாகத் தின்னலாமென்ற எண்ணத்தோடு,
    பட்டினி கிடப்பதுண்டு. அவர்களைப் பதினாறு நாளும் கழிந்த
    பிறகு பார்த்தால், அவர்களுடைய உடம்பு பட்டினியால்
    மெலிந்திராது; முன்னையிற் பார்க்கிலும் பருமனாக இருக்கும்; பெயரளவில் தான் பட்டினி; ஆகாரம் மற்றக் காலங்களைப் பார்க்கிலும் அதிகமரயிருக்கும்; பருத்திப் பொதி-பஞ்சு மூட்டை.
  14. 87-88. கட்டளை: கோவிலுக்கு ஒரு விசேஷங் குறித்து ஏற்படுத்தப்பட்ட தருமம். சிதம்பரம், மதுரை, திருச்செந்தூர் ஆகியவை தமிழ் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள். இங்கெல்லாம் வருடந்தோறும் தருமத்தின்
    பொருட்டுக் கொடுத்துதவ எண்பது கோட்டை நெல் வேண்டும் என்கிறார் காரணவர்.
  15. 89. கோட்டை: இருபத்தொரு மரக்கால் கொண்ட
    முகத்தல் அளவை; பட்டணம் படிக்கு எழுபத்தைந்து படி.
  16. 91-95. பெரும்பழஞ்சி என்பது திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள நான்குனேரியைச் சேர்ந்த ஒரு சிற்றூர். அதில் ஒரு பிராமணக் குடும்பத்திலுள்ளவர்கள் பெயர் பெற்ற மந்திரவாதிகளாயிருந்தார்கள். அவர்கள் இந்திர ஜாலம், மந்திர ஜாலம், மகேந்திர ஜாலம். கூடுவீட்டுக் கூடு பாய்தல்,
    ஜலஸ்தம்பம், வாயுஸ்தம்பம் முதலியவற்றில் மிகவும் தேர்ந்தவர்களென்று சொல்லுவதுண்டு. இவர்கள் ஆண்டுதோறும் இப்பக்கங்களிலுள்ள ஊர்களுக்கு வந்து ஜால வித்தைகள் செய்து பணம் பெற்றுப்போவதுண்டு. யாரேனும் தாங்கள் கேட்டபடி பணம் கொடுக்கவில்லையானால், தங்களுடைய ஜால வித்தைகளினால் அவர்களுக்குப் பலவிதத் தீங்குகள் செய்து விடுவதாகப் பயமுறுத்துவார்கள். ஏழை ஜனங்களும், பெரும் பழஞ்சி ஐயர் பணம் கொடுக்கவில்லையானால், வயிற்றுவலி உண்டாக்கி விடுவார் என்றும், குறளியை ஏவிவிட்டுக் கூரை, வைக்கோற் போர் முதலியவற்றில் தீயைக் கொளுத்தி விடுவார் என்றும் நம்பிப் பயமடைவார்கள். கொண்ட கடன்- கட்டாயமாகக் கொடுத்துத் தீரவேண்டிய தண்டம் (மனமில்லாமல் நிர்ப்பந்தத்திற்காகக்
    கொடுக்கும் தானம்.)
  17. 95. குறளி - குறளிச் பிசாசு.
  18. 98-99. சானல் வாச்சர் - நீர்ப்பாசன இலாகாவில் எட்டு ருபா சம்பளம் பெறும் ஒரு வேலைக்காரன். வாய்க்காலில் தண்ணீர் விடுவது இவன் இஷ்டத்தைப் பொறுத்தது.
  19. அட்ரஸ் - உபசாரப் பத்திரம்
  20. 103. கார்டர் - காட்டிலாகாவில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஓர் ஊழியன். இவனைப் போன்றவர்களுக்குங்
    கூட 'அட்ரஸ்' கொடுப்பதும் 'ஸென்ட் ஆப்' நடத்துவதும்
    உண்டென்று சொல்லி, பொதுவாக, தகுயில்லாத உத்தியோகஸ்தர்களுக்கும் இந்நாட்டில் உபசாரங்கள் செய்வதை ஏளனம் செய்கிறார் ஆசிரியர்.
  21. 136. முருக்குத்தடி: முள்ளு முருங்கை மரத்தின் அடி மரம். இது பார்வைக்குப் பெரிதாக இருந்தாலும் மற்ற மரங்களைப்போல உறுதியுடையதல்ல. ஆகவே, இதை உபயோகமற்றதாகத் தள்ளிவிடுகின்றனர்.
  22. 144. பாதர் சிங்கம் - பஹதூர் சிங்கம்.
  23. 153. கன்றுகள்: மக்களை நிந்தையாகக் கன்றுகள் எனக் கூறினர்.
  24. 154. ஆவலாதி-பிராது.
  25. 178. கொட்டாரம் - அரண்மனை.
  26. 183. நாயும் புலியும்; பதினைந்து நாயும் மூன்று புலியும்
    என்ற விளையாட்டு (பதினைந்தாம்புலி). நடுமனை கீறுதல் -
    இந்த விளையாட்டு விளையாடுவதற்காகவுள்ள கட்டம் வரைதல்.
  27. 193. தாயப்போர் ! தாயம் ஆடுதல், கட்டமாடுதல்.
  28. 194. இருபொருள்: வேசியும் கள்ளும்.
  29. 196. பெருந்திருவமுது: கடவுளுக்குப் படைக்கும் பெரிய நிவேதனம்: இங்கே பரிகாசமாக மருமகனுடைய போஜனத்தைக் குறிப்பிடுகிறது.
  30. 212. கொத்து: வயல் அறுவடை செய்தவர்களுக்குக் கொடுக்கும் நெற்கூலி.
  31. 214. புளியடி - ஒரு வயலின் பெயர். சூடு - நெற் கதிரின் குவியல்.
  32. 215. வட்டம் தள்ளுதல் - கடா வீடுதல் (போரடித்தல்).
  33. 223. சாக்கு - கோணிப்பை : நெல் களவுசெய்து கட்டிக் கொண்டு போன சாக்கைக் குறிக்கின்றது. இருபதாம் நம்பர் ஷாப்பு- இங்கே, கள்ளுக்கடை.
  34. 230. வேசியர் குடும்பங்களை எண்ணாற் குறிப்பது வழக்கம்.
  35. 238. பன்னிரண்டு படாகை: படாகை - ஒரு நாட்டின் சிறு உட்பிரிவு. முற்காலத்தில் நாஞ்சில் நாடு பன்னிரண்டு படாகைகள் அல்லது பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.
    அவையாவன:
    1. மேல் படாகை

    2. நடுவுப் படாகை

    3. அழகிய பாண்டியபுரம் படாகை

    4. அனந்தபுரம் படாகை

    8. தாழக்குடிப் படாகை

    7. படப்பற்றுப் படாகை

    8. கோட்டாற்றுப் படாகை

    9. பறக்கைப் படாகை

    10. தேர்ப் படாகை

    11. சுசீந்திரம் படாகை

    12. அகஸ்தீசுவரம் படாகை