பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

இந்த அரசியல் புரட்சி வெற்றி பெற மூலகாரணமாய் நின்றவன் வில்லியம் டெல் என்ற வீர வில்லாளி. அவன் அரசியல் மேதை அல்லன்; சொல்மழை பொழியும் செந்நாப் படைத்தவனும் அல்லன். கூட்டங்களுக்கே அவன் போக மாட்டான். ஆனால் அவன் செயலாளன். அவனிடம் புரட்சிப் படை ஏதும் இல்லை என்றாலும், இரும்பு நெஞ்சும், குன்றுகள்போல் உயர்ந்த தோள்களும், பெரிய வில்லும் அவனுக்குத் தலைமைச் சிறப்பைக் கொடுத்தன. -

இந் நாடகத்தில் டெல். அவன் மனைவி ஹெட்விக். குழந்தைகள் வால்டரும். வில்லியமும், மாமனுர் வால்டர் ஆகியவர்களின் கதையும், சுவிஸ் மக்களின் சுதந்திர உணர்ச்சியும் இணைந்து வருகின்றன. ஸ்டா பாச்சர், மெல்ச்தல், கோன்ராடு முதலிய வீரர்களும், ஜெர்ட்ருட், பெர்தா போன்ற பெண்மணிகளும் மக்களின் எழுச்சியை உருவாக்குவதில் பங்கு கொள்கிறார்கள். வெர்னர் என்ற கிழப் பிரபு தேசபக்தியே உருக்கொண்டதுபோல் விளங்குகிறார். வழி தவறிச் சென்ற தம் மருமகனுக்கு அவர் கூறும் நல்லுரைகள் பொன்னெழுத்துக்களில் பொறிக்கத் தக்கவை. வில்லியம் டெல்லின் கதை பல உருவங்களில் உலகில் பல நாடுகளில் பரவியுள்ளது. இந்திய சுதந்திர இயக்கத்துக்கு மிக நேரடியாக உதவி யிருக்கக்கூடிய இக்கதையை, இந்திய மக்கள் போற்றிப் பயன்படுத்திக் கொள்ளாமல் போனது என்றும் ஒரு புரியாப்புதிராகவே கருதத் தக்கது.