பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிரலாபித்துக் கொண்டே வாழ்கின்றார்கள். வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகின்றார்கள். இதுதான் மனித வரலாறு தருகின்ற வருத்தமான காட்சி.

கோடி கோடியாக மனிதர்கள் பிறக்கின்றார்கள், கூடிகூடி வாழ்ந்தவாறு கோடியிலே கிடந்து, வாடி வதங்கி, அழுது புலம்பி, இளைத்துக் களைத்து, இறந்து போய் இருந்த இடத்தைக் காலி செய்து விடுகின்றார்கள்.

பூதஉடல் போனாலும் புகழுடல் இந்தப்பூதலத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் புத்திசாலிகள்.

வரம் பெற்று வாங்கி வந்த இந்த மனித உடலை, புனித உடலாக மாற்றிப் புகழ் பெற்று இறப்பவர்கள் தான், பெருமை பெற்றவர்கள் ஆவார்கள். அப்படி நினைக்காதவர்கள் நிலை, மண்ணுக்கும் அதில் கிளம்பி மறையும் புழுதிக்கும் கீழ்தான். பாழ்தான்.

'தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்று வள்ளுவர் பாடிச் சென்றார்.

'தோன்றிற் பொருளோடு தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று'