பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உன்மீதுள்ள எல்லையற்ற பற்று; நீ வாடையா என்ன? - வெறுப்பதற்கு; தென்றல் அல்லவா?" அண்ணாவின் அழகு தமிழ்ப் பேச்சை, மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றான தென்றலாக்கிக் காட்டியிருப்பது, தென்றலினும் குளிர்ச்சியை நமக்குத் தருகிறது!

அண்ணாவின் 'கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு’ என்பதிலே தன்னை முற்றிலுமாகப் பறிகொடுத்து நிற்பவர் புலவர் கலைமணி. இதோ அவரே கூறுவதைக் கேளுங்களேன்!

"அண்ணா நீ வாய் திறந்தாய்! கொட்டின முத்துக்கள்; சிதறின. வைரங்கள்; எல்லாம் மரகதக் குப்பைகள்! வந்தவன் ஒவ்வொருவனும், அந்த விலைமதிக்க முடியாத மணிகளை, மனக் கூடையிலே வாரிக்கொண்டு போயினன். எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து; அந்த முத்தை நாடி நான் நெருங்க ஆரம்பித்தேன். அது என்னருகிலே இருந்தது! அந்த முத்திலே ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன என்பது கலைமணியின் உள்ளத்தின் ஆழத்தே இருந்து வெளிப்படும் உயிர்ப்பான எண்ணம்.

ஆட்சி முறை எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கை கொண்டு புலவர் கலைமணி விளக்கியிருப்பது எண்ணியெண்ணி உள்ளத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இன்றைய மக்களாட்சியில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி நாட்டை ஆள்கிறது; சிறுபான்மைக் கட்சிகள் எதிர்கட்சிகளாக உள்ளன. இயற்கை குடியரசில் சிறுபான்மைக் கட்சி ஆட்சி செய்கிறது; பெரும்பான்மைக் கட்சி ஆட்சி செய்வோரைக் கண்காணித்து வருகிறது; ஆம்! உலகில் நிலபரப்பு குறைவு: கடற்பரப்போ மிகுதி! எதிர்கட்சியைப்போலுள்ள பூமிதான் மக்களை ஆட்சி புரிகிறது. சிறுபான்மைக்குச் சிறப்பான தகுதியை வழங்கியதோடு பெரும்பான்மை நின்றுவிடவில்லை. 'பூமியே! நீ கொடுங்கோலை ஏந்தினால், புரண்டு வரும் கடலலைகளால் உன்னைப் புதை குழிக்கு அனுப்புவேன்; எச்சரிக்கை" என ஓயாமல் குரல் கொடுத்து வருகிறது.