பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


“நீலத் திகிரி அனையார் அரங்கர்
        நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநா ளதனில்
        கொண்ட கோலங்களே.”42[1]

இப்போது ‘தூவெளியினிடை விரைந்தோடும் வியன் பெரு வையத்தின் காட்சி’ நமக்குப் புலனாகின்றதல்லவா? வியப்புக் கடலில் ஆழ்ந்து, ஆண்டவனின் படைப்பின் விந்தையில் திளைக்க முடிகின்றதல்லவா? கூர்தல் அறக் கொள்கையின் (Theory of Evolution) கூறுகளும் கவிதையில் மிளிர்வது நமக்குத் தட்டுப்படுகின்றதையும் உணர்கின்றோம். அறிவியல் தத்துவம் இலைமறை காய்போல் காட்சி தருவதையும் கண்டு அநுபவிக்கின்றோம்.

திவ்விய கவியின் மற்றோர் இடத்தில் (திருவேங்கட மாலையில்) திருவேங்கட மலையின் உயர்ச்சியைக் கூறும் பாங்கில் இராசி மண்டலத்தையும் மலையையும் பொருத்திக் காட்டுவதில் இலக்கியமும் அறிவியலும் (ஏன், சமயமும் கூடத்தான்) இணைந்து செயற்படுகின்றன. எல்லாவற்றையும் காட்ட முயல்கின்றேன் - இராமகிருஷ்ணா இனிப்பகம் அல்லது அகர்வால் பவனத்திலிருந்து சில பொருள்களை வாங்கி வந்து உங்கள் இல்லத்தில் தருவது போல்.

“துய்ய செம்பொற்கோயில்
        சுடர்எறிப்பக் கண்முகிழ்த்து
வெய்ய வன்தேர் மாஇடறும்
        வேங்கடமே.”43[2]

(துய்ய - தூய; சுடர் - காந்தி; எறிப்ப - வீசுதலால்; கண் முகிழ்த்து - கண் மூடப்பெற்று; வெய்யவன் - சூரியன்; மா - குதிரை)

திருமலையிலுள்ள பொன்மயமான திருக்கோயில் விமானத்தின் ஒளி மிகுதியாய் வீசுதலால் பகலோனின் தேர்க்குதிரைகள் கண்கூச்சமடைந்து கண் விழிக்க இயலாது கண் மூடி அம்மலையின் உயர்வினால் அதில் கால் இடறுகின்றன என்கின்றார்.


  1. 42. திருவரங்கத்துமாலை - 34
  2. 43. திருவேங்கடமாலை - 9