பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்த அரிய நூலுக்கு அழகியதோர் அணிந்துரை நல்கி நூலுக்குப் பொலிவும் சிறப்பும் பெருமையும் ஏற்படுத்திய பெரியார் நீதியரசர் என். கிருட்டிணசாமி ரெட்டியார், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாவார். அரசு வக்கீலாக இருந்தபோது நீதிக்கு வாதாடியவர். நீதிபதியான பின்னர் நீதி வழங்கியவர். எண்பது அகவையைக் கடந்து நிற்கும் இப்பெருமகனார் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்வி, மருத்துவ, சமூக, சமய நிறுவனங்களின் தலைமையாக இருந்து கொண்டு ஆற்றிவரும் தெய்வப்பணிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெறவேண்டியவை. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை சுமார் ஐம்பது கோடி மதிப்புடைய பதினைந்து உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளைக் கொண்ட விவேகாநந்த கல்வி நிறுவனம், தாம்பரம் இந்து மருத்துவப் பணி மன்றம், சங்கர நேத்திராலய நிறுவனம், காஞ்சி காமகோடி மடத்தைச் சார்ந்த இந்து சமயப் பணிமன்றம் ஆகியவை ஆகும். இத்தகைய நிறுவனங்களின் பணியைத் தம் இகவாழ்வுக் குறிக்கோளாய்க் கொண்டு பணிபுரியும் நீதி அரசரின் அணிந்துரை பெற்றது இந்த நூலின் பேறு; என் பேறுமாகும்; அணிந்துரை நல்கி ஆசி கூறிய பெருமகனாருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியவை.

இந்த நிறுவனத்தின் முதல் இயக்குநர் திரு.T.M.P. மகாதேவன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அத்துணைத் தத்துவ நூல்களிலும் அடியேன் ஆழங்கால்பட்டு மிகுபயன் பெற்றவன். தத்துவத்தைத் தெளிவான எளிய ஆங்கில நடையில் எழுதிய மாபெரும் மேதை. அடியேன் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் ஓய்வு பெற்று சென்னைக்கு வந்த அதே ஆண்டு (1978) அவர் இல்லத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டமொன்றில் சில ஆழ்வார் பாசுரங்களைக்கொண்டு அத்வைதத் தத்துவத்தை விளக்குமாறு பணித்தார். கடந்த இருபதாண்டு காலமாய் (1960-1980) ஆழ்வார் பாசுரங்களை விசிட்டாத்வைத நோக்கில் ஆய்ந்த அடியேனை இப்பணி திக்குமுக்காடச் செய்தது. பரம்பொருளின் அருளாலும் பணித்த பெருமகனாரின் ஆசியின் கனத்தாலும் நான்கைந்து பாசுரங்களைக்கொண்டு விளக்க முயன்றேன். என் பேச்சை உன்னிக் கவனித்த பெருமகனார் ‘நன்று நன்று’ என்று பாராட்டி ஆசி கூறினார்.