பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. நெஞ்சில் குத்திய முள்!


ரேவதியைப் பொறுத்த மட்டில், அவளுக்கு அவள் பெயர்தான் உயர்வு; அந்த உயர்வு மனப்பான்மைதான் அவளுக்கு உயிராகவும் உலகமாகவும், வாழ்வாகவும் இருந்து வந்தது; இருந்து வருகிறது. ஆகவேதான், அவள் ஒரு தனிப்பிறவியாக மதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும். வருகிறாள்.

‘ரேவதி இல்லம்’ தளதளத்தது.

காலம் ஒரு புள்ளிமான் என்பது சரிதான்.

மணி எட்டு அடித்தது.

மணியோசை அடங்குவதற்குள், அவள் மாடியில் தனது அந்தரங்க அறையில் ‘டாண்’ என்று வந்து நின்றாள்.

ஒளி விளையாடுகிறது.

காற்று விளையாட்டுக் காட்டுகிறது.

‘ஸ்டெதஸ்கோப்’ இராப் பொழுதிலும் ஓய்வு காணத்தான் வேண்டும்.

ரேவதி புன்னகை செய்கிறாள். அவளது புன்னகையில் அவளே மயங்குகிறாள். கிறங்கவும் செய்கிறாள். இந்தப் புன்னகை சாமானியப்பட்டதா, என்ன?

நிலைக்கண்ணாடி நகர்கிறது.