பக்கம்:இன்னொரு உரிமை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லவ் ஆல் 15


‘யார் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன’ என்பது மாதிரி படுத்துக் கிடந்த அந்த வெள்ளைப் பசு சத்தம் கேட்டு தலையைச் சாய்த்தது. அவ்வளவுதான். எப்படி எழுந்தது, எப்படிப் பாய்ந்தது என்பதைச் சொல்லமுடியாது. கழுத்தை வளைத்து, கொம்புகளை அம்புகளாக்கி நாய்ப் பட்டாளம் மேல் பாய்ந்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி கால்கள் தரையில் பதியாமல் அங்குமிங்குமாகக் குதித்தது. நான்கு பக்கமும் சிதறிய நாய்களை ஒன்றன்பின் ஒன்றாய்த் துரத்தியது. கட்டிட வளாகத்திற்கு அடியில், அவற்றை விரட்டிவிட்டு பன்றிக்குட்டியை லேசாய் சாய்த்துப் பார்த்துவிட்டு, மீண்டும் எந்த இடத்தில் எப்படிப் படுத்திருந்ததோ அந்த இடத்தில் அப்படி படுத்தது.

நகரத் திராணியின்றி குன்றிப்போய் நின்ற பன்றிக் குட்டி, தொலைவில் நான்கைந்து குட்டிகளோடு அங்குமிங்குமாய் அலைமோதிக் கொண்டிருந்த தாய்ப் பன்றியைப் பார்த்ததும் இது அதை நோக்கியும், அது இதை நோக்கியும் நெருங்கிக் கொண்டிருந்தன.

பூச்சூடிய பெண்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். வாலிபால் சம்பத் இப்போது வேறு பக்கம் நின்று சர்வீஸ் போட்டான். இப்படிச் சொன்னபடியே பந்தை எகிறவிட்டான்.

“லவ் ஆல்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/24&oldid=1369522" இலிருந்து மீள்விக்கப்பட்டது