பக்கம்:இன்னொரு உரிமை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதியின் கதை 29

தொட்டிலில் கிடந்த குழந்தை கத்தியது. அந்தக் கத்தல், அவள் காதில் விழவில்லை. எவளோ ஒருத்தி, குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து அவள் மடியில் திணித்துவிட்டு, “மீனா பசியில துடிக்கிறாள்... பால் கொடம்மா” என்றாள்.

கோமதி குழந்தையைப் பார்க்கவில்லை. அதைக் கொண்டு வந்தவளை நோக்கவில்லை. குழந்தை கத்தியது. “நீயும் வாழப்படாது... நானும் வாழப்படாது.டி. உலகத்துல பெண்ணாய்ப் பிறக்கவே படாதுடி! பாலும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். பேசாம சாகுடி” என்று தன் பாட்டுக்குப் புலம்பினாள்.

குழந்தை கத்திய களைப்பில் மூச்சு வாங்கி முனகிய போது, தாய்மையின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டவள்போல குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்டாள்.

கோமதிக்கு இப்போது அண்ணனோடு போன கார் மறந்துவிட்டது. அதில் கணவனோ அல்லது அவன் அனுப்பும் சேதியோ அந்தக் காரில் வரும் என்ற எண்ணமில்லை. அவளைப் பொறுத்தமட்டில் மாமியார் என்ற ஒருத்தி மரித்தேபோய்விட்டாள். கணவன் என்ற ஒருவன் காணாமலே போய்விட்டான் வாழ்க்கை என்பது ‘அம்மா’ என்ற ஒருத்தியாக மட்டுமே ஆகிவிட்டது.

இடுப்பில் குழந்தையை ஏந்தியபடி திருவனந்தபுரம் இருந்த திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தாள். ✽


(18-9-80 குமுதம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/38&oldid=1369602" இலிருந்து மீள்விக்கப்பட்டது