உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

திருநெல்வேலியின் ஒருபகுதியான வண்ணார பேட்டையில் நடைபெற்று வந்த வட்டத்தொட்டி அந்த நாட்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்கு அறிமுகமான ஸ்தாபனம். மேலைநாட்டில் டாக்டர் ஜான்ஸனின் Library Clubக்கு எவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் உண்டோ, அந்த அளவுக்கு திருநெல்வேலியிலிருந்த இந்த 'வட்டத்தொட்டி'க்கும் உண்டு. தமிழ்க் கவிதைகளையும், கம்ப ராமாயணத்தையும், கம்பன் பாடல்களில் காணப்படும் நயங்களையும் அனுபவிப்பதற்காகவே, ரசிகமணி டிகேசியின் வீட்டில் கூடிய கூட்டத்துக்குத்தான் நாளடைவில் 'வட்டத்தொட்டி’ என்ற பெயர் ஏற்பட்டது. ரசிகமணியின் வண்ணாரபேட்டை வீட்டில் நடுமுற்றமாக இருந்த, வட்டவடிவமான ஒரு தொட்டிக்கட்டு அமைப்பில்தான் டிகேசியின் அன்பர்கள், மாலைவேளைகளிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுவார்கள். அறுபது வயதை எட்டியவர்கள், அதற்கும் மேற்பட்டவர்கள் முதல் பதினெட்டு ஆண்டு கூட நிறையாத கல்லூரி மாணவர்கள் வரை வட்டத்தொட்டியின் உறுப்பினர்களாக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், என்று பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்கள் எல்லோரும் வந்திருந்து, வட்டத்தொட்டிக்குப் பலம் கூட்டுவார்கள். ஒரே கவிதைக் கோலாகலம்தான். செவிக்கு அளிக்கப்படும விருந்தோடு, வயிற்றுக்கும் விருந்து உண்டு. அப்போது நான் சிறுமி. என் தந்தையாருடன் இரண்டொரு