யார்களின் எழுத்துக்கள் என் தமிழ்ப் பற்றிற்கு நெய் வார்த்து வளர்த்தன, வளர்க்கின்றன.
ஆழ்ந்த புலமை மிகுந்தால் சலனம் குறையலாம். பற்றுமட்டுமே மிகுந்துள்ள எனக்கு, தமிழைத் தமிழாகக் காக்கவேண்டுமே என்னும் துடிப்பு. தகுதியில்லாவிட்டாலும் தாயிடம் பற்றுக் கொண்டு, தாய்க்குக் தீங்கு நேராதபடி காக்கத் துடிக்கும் நிலையில் உள்ளவன் நான். எனவே, தமிழணங்கு. உலகப் புகழுக்கு மயங்கி கண்டவர்களிடம் போய்ச் சிக்கிவிடக்கூடாதே என்று கவலைப்படுகிறேன். அவள் உலக அரங்கில் காட்சியளிக்கும் போது அவளுக்குச் சிறு தீங்கும் நேராவண்ணம் விழிப்பாயிருந்து காக்கும் ஆற்றல் மறவர்கள் தமிழ் மொழிக்குத் தொடர்புடைய, தமிழ் மொழியின் தொன்மையை எடுத்து விளக்கத் துணைபுரியக் கூடிய பல்வேறு துறைகளிலும் அறிஞர்களான தமிழ் மறவர்கள்-பலர் தேவையென்பதை பெரிதும் உணர்கிறேன். அவ்வுணர்வை இயல்பாய் கொட்டியுள்ளேன். மெருகிட்டுக் காட்ட ஆற்றல் அற்றேன். இளைஞர்களைத் தூண்டும் என்னும் ஆசையால், என் ஏக்கத்தை உருவாக்கியுள்ளேன். ஆக்கத்தில் திளைப்போர் பொறுத்தருள்க.
பாரிசு மாநாட்டிற்கு என்னை அனுப்பி வைத்த தலைவர் நல்லவர், வல்லவர், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். காலமெல்லாம் நன்றியுடையவனாவேன்.
‘கல்கண்டில்’ வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘உலகத் தமிழ்’ என்னும் தலைப்பில் இந்நூலை வெளியிடும் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி. அதன் செயலர் திரு. க. சோமசுந்தரம் அவர்களுக்குத் தனி நன்றி உரியதாகும்.
கட்டுரைகளுக்கு இடம் தந்து என்னை ஊக்கிய திரு. தமிழ்வாணன் அவர்களுக்கும், அவரோடு தொடர்புபடுத்திய ‘சத்திய கங்கை’ ஆசிரியர் திரு. பகீரதன் அவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி.
சென்னை-30 21-12-1971 |
நெ. து. சுந்தரவடிவேலு |