உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழில் விருத்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மாலை

வட்டத் தாமரை இலையினில் கண் வளர்
    வாளைகள் நீர்மோதத்
தட்டி ஒட்டிடும் ஆயனின் கழியெனத்
    தம்மனைக் கன்றுள்ளிக்
குட்டை மேவிய நாகுகள் வாலினைத்
    தூக்கியே குதித்தோட
எட்டி மேற்றிசை மலையிடைப் பரிதிசாய்
    எழில்மிகு சுடர்மாலை !................................................ 3

மேலை வானிடை விரவிய செந்நிற
    மிகுந்திடு ஒளிவெள்ளம்
சாலை மாவிளந் தளிர்நிறம் பூநிறம்
    சார்ந்ததாய்த் தலைதாழ்த்திச்
சோலை புக்கிடும் இணையிணைக் குருவிகள்
    தோப்பினைக் குறுகாமுன்
மாலை மங்கிடச் செவ்வொளி மங்கிடும்
    மலர்மண இருள்மாலை !................................................... 4

கன்று கூப்பிடக் கறவைகள் ஊர்புகக்
    காரிருள் கீழ்நோக்க
முன்றில் நீள்சடை முதுகினை ஊன்றியே
    முன்னுள வெளிநோக்கிச்
சென்ற ஆளனின் தோளினை உன்னிடு
    தேமொழி மடமாதர்
என்று மீளுவர் சென்றவர் எனநினைத்
    தேங்கிடு துயர்மாலை !...................................................... 5