உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


தின்னாதேம்மா. பல்லுக்கு கெடுதி. உடம்புக்கும் ஆகாதுன்னு சொல்லியாச்சு கேட்டால்தானே. நறநறன்னு கடிச்சுத் தின்னுவா. ஒண்ணுக்குப் பிறகு ஒண்ணு. அதுக்கு மேலே ஒண்ணு யின்னு டஜன் கணக்கிலே தின்பா. இப்ப அவள் தின்னது எட்டாவதோ, ஒன்பதாவதோ, அதுதான் கூடாது யின்னு அவள் கையிலேயிருந்து பிடுங்க வந்தேன். அவள் விழுந்தடிச்சு ஓடி வந்து உங்க மேலே மோதிவிட்டாள்!' என்று விளக்கம் கூறினாள் தாய்.

'நானாக யிருக்கப் போய் நல்லதாச்சு. வேறே வீணன் எவனாது வந்திருந்து இப்படி நடந்திருந்தால் என்னாகிறது?' என்று திருவாய் மலர்ந்தருளினார் ஆசிரியர்.

'என்னாகும் தெரியாதா! குமாரியின் ரோஜாப் பூக்கன்னம் செவ்வரளியாக மாறிப் போகும். அடிபட்டுச் சிவக்காது. முத்தம்பட்டுத்தான்!' என்று கொக்கரித்தது அவர் மனம். இதை அவர் வெளியிடவில்லை.

'செல்வாவுக்கு விளையாட்டுப் புத்தி போகவேயில்லை. பதினெட்டு வயக ஆகுது. இன்னும் சிறு பிள்ளைத்தனம் போகலே பாருங்களேன்' என்றாள் அம்மா.

அந்தத் திடீர்ச் சந்திப்பு பற்றி இப்போது எண்ணிய ஆசிரியர் மனம் ஆரவாரமாக ஆமோதித்தது. 'ஆமாம். செல்வாவுக்கு இன்னம் விளையாட்டுப்புத்தி போகவில்லை. வயசாகி என்ன பிரயோசனம்!' என்று.

'உம். இருந்தாலும் புள்ளெ நல்ல புள்ளெ. குதிப்பும் கூத்தும் குஷியும் குழந்தைத்தனமும் ஜாஸ்தி. அதனாலே என்ன!' என்று பரிந்து பேசியது ஒரு எண்ணம்.

'வருங்காலத்திலே இவள் நட்சத்திரமாக ஜொலிப்பாள். ஆனால் வால் நட்சத்திரமாகத்தான் விளங்குவாள்!' என நினைத்த பரமசிவம் செல்வாவின் பேட்டியை மறுபடியும் ரசித்து அனுபவிக்கத் தொடங்கினார். அவர் பத்திரிகையில் அவர் எழுதியது தான்.

'ஸார், இது நான் வந்து உங்களைக் கண்ட பேட்டியுமல்ல. நீங்கள் தேடி வந்து என்னைச் சந்தித்த பேட்டியுமல்ல. அதனாலே முட்டிக்கொண்ட பேட்டி என்றோ, முட்டிக்கொண்டு பேட்டி கண்ட குட்டி எனவோ தலைப்பு கொடுங்கள் ஸார்!' என்றாள் குமாரி