ராதை சிரித்தாள்
1
‘வாங்க, செளக்கியந்தானா?’ என்று கேட்டாள் ராதை.
வண்டியிலிருந்து இறங்கி வந்த சிவராமன் அவளது புன்னகைக்கும் இன்மொழிக்கும் பதிலாகத் தலையசைப்பும் மென்னகையும் அளித்தான். ‘ஏய், சாமான்களையெல்லாம் உள்ளே கொண்டுவந்து வையப்பா’ என்று வண்டிக்காரனுக்கு உத்திரவிட்டு விட்டு வாசற்படியைப் பார்த்தான்.
அங்குதான் அவள் நின்றாள். ‘வாங்க, உள்ளே வந்து உட்காருங்க’ என்று அன்பாக உபசரித்தாள். ‘எங்க அம்மா அப்பால்லாம் செளக்கியம் தானே?’
‘ஊம்’ என்று தலையசைத்தான் அவன். அவளை ஒருமுறை பார்த்தான். வேறு என்ன சொல்வது, அல்லது எப்படிப் பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லையோ என்னவோ! மெளனமாக நின்றான்.
அவள் அவனை வியப்புடன் கவனித்தாள். வழிவிட்டு விலகி உள்ளே போனாள். ‘அவுக கடைக்குப் போயிருக்காக, மத்தியானச் சாப்பாட்டுக்குத்தான் வருவாக இனிமே’ என்று அவளாகச் சொன்னாள்.
அப்போதுதான் அவனுக்குப் பட்டது 'பார்த்தியா! அவரைப் பற்றி விசாரிக்கவே இல்லையே என்று. என்ன குழப்பம்! என்று நெஞ்சோடு புலம்பிக் கொண்டான் அவன். ஏதோ நினைத்தவனாய் 'அப்படியானா அவாளை ஆபீஸ்லே போயி.....' என்று தொடங்கினான்.
அவள் குறுக்கிட்டாள். ‘அதுக்கு இப்ப என்ன அவசரம்? முதல்லே குளியுங்க. அப்புறம் காபி சாப்பிட்டு விட்டு மற்றதுகளை கவனிக்கலாம்.’
அவள் அவனையே பார்த்தபடி நின்றாள். பிறகு வேலையற்றவளாய் அப்படியும் இப்படியும் அலைந்தாள். விரலால் கதவைத் தடவினாள். சிரித்தாள்.