உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

39

அக்கூட்டங்களில் சிதம்பரம் பிள்ளை புயல்போல சுழன்று சுழன்று வெள்ளையர்களது மனித நேயமற்ற தன்மைகளைச் சாடுவார். தொழிலாளர்களது கோரிக்கைகளைப் பெறும் வரை முதலாளிகளுக்குப் பணியக் கூடாது என்பார். சிதம்பரம் பேச்சு தொழிலாளர்களின் ஊக்கத்தையும் உறுதியையும் அதிகப்படுத்துவனவாக அமைந்தன!

கோரல் மில் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. அதனால் மில் முதலாளிகள் சிதம்பரம் பிள்ளை மீது தீராக் கோபமடைந்தார்கள். வேலை நிறுத்தம் செய்வதற்குத் தூண்டி விட்டவர் சிதம்பரம் பிள்ளைதான் என்று அவர் மீது வழக்குத் தொடுத்தார்கள்.

பொதுக் கூட்டங்களில் அவர் பேசினால் ஊரில் கலகம் ஏற்படும். அமைதி நாசமாகும். எனவே பொதுக் கூட்டத்தில் பேசக் கூடாது என்று மாஜிஸ்திரேட் சிதம்பரம் பிள்ளையை நேரிடையாகவே அழைத்து எச்சரித்தார்.

மாஜிஸ்திரேட் எச்சரிக்கை சிதம்பரம் பிள்ளைக்கு செவிடன் காதிலே ஊதிய சங்கு போல ஆனது. மதிக்கவில்லை அவர். தொடர்ந்து அவர் தொழிலாளர்களது கூட்டங்களில் பேசியே வந்தார்.

கோரல் மில் தொழிலாளர்களது வேலை நிறுத்தம் மதுரையில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் தெரிந்தது. மதுரைத் தொழிலாளர்களும் தூத்துக்குடித் தொழிலாளர்களுக்கு அனுதாபம் காட்டும் எண்ணத்தில் வேலைக்குப் போக மறுத்துவிட்டார்கள். அதனால் தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஏழு நாட்கள் நீடித்தது. மில் முதலாளிகளான வெள்ளையர்கள் தொழிலாளர்களுக்குப் பணிந்தார்கள்.