இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அனலை விழுங்குவர் மக்கள்!
விபின் சந்திரபால், இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். சிறந்த நாவன்மை படைத்த அஞ்சா நெஞ்சர். வங்க நாட்டின் தலைவர். எல்லாராலும் பாராட்டத்தக்க சிறந்த பண்பாளர்!
அரவிந்த கோஷ் என்ற தீவிரவாதக் கட்சித் தலைவர் மீது வெள்யைர் ஆட்சி அப்போது ஒரு சதி வழக்கைத் தொடுத்திருந்தது. அந்த வழக்கில் அரசு சார்பாக சாட்சி கூற விபின் சந்திர பால் வன்மையாக மறுத்து விட்டார். சான்று கூற அவர் மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்று காரணம் கூறி சந்திரபாலருக்கு ஆறுமாதம் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.
தண்டனையை அனுபவித்து விட்டு, 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி விபின் சந்திரபால் விடுதலை பெற்று சிறை மீண்டார். அந்த நாளை திருநெல்வேலி மக்கள் விழாவாக் கொண்டாட முடிவு செய்தார்கள். வடநாட்டிலும் அந்நாள் விபின் சந்திரபால் வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது.