உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 19


தாய்ச் சம்பிரதாயத் திருமணத் தொடர்புகள், வடநாட்டில் கோன்ட், ஸந்தால், குண்டா போன்ற தொல்குடி இனத்தாரிடம் இன்னும் நிலவுகின்றன. சில இனத்தாரிடையே, கணவன் இரவுணவு முடித்துப் பின்னரே மனைவியைக் காண வருகிறான். வேறு எந்த வகையிலும் அவளைக் கட்டுப்படுத்துவதில்லை. குடும்பத்துச் சொத்துரிமை பெண்ணுக்கே இருந்தது.

தொல்குடி மக்களில் சிலரிடையே இப்படியும் கூட ஒரு வழக்கு நிலவுகிறது. பெண்ணுக்கென்று ஒரு சிறுதொகை கொடுப்பதற்கு இயலாத வறிய இளைஞன், திருமணம் புரிந்து கொண்டபின் மனைவியையோ குழந்தைகளையோ அவள் இடத்தை விட்டுப் பெயர்த்துச் செல்வதில்லை என்று வாக்களிக்கிறான்.

தென் இந்தியாவில், நாயர் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே, தாயகச் சம்பிரதாயம் நிலவி வந்திருப்பதை குறிப்பிடாமல் இருக்கமுடியாது.

திருமணம் புரிந்துகொண்டு தனது வாழ்விடத்தை நிர்ணயிப்பது பெண்ணைச் சார்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் விலங்குகளின் வாழ்க்கை முறையினின்றும் மனிதர் பின்பற்றிய முறையாக இது கருதப்பட்ட போதிலும், நாகரிக வளர்ச்சியை எய்தியிராத தொல்குடிச் சமுதாயத்தினரிடையே பெரும்பாலும் பெண்ணின் சமுதாய மதிப்பும், சுதந்திரமும், ஆணுக்குச் சமமான உரிமைகளும், போற்றற்குரியவனவாகவே இருக்கின்றன. மிக நாகரிகமான நவீனமான பெண்ணுரிமைச் சமுதாயத்திலும்கூட இந்த மதிப்பும் உரிமைகளும் இந்நாள் பாதிக்கப்பட்டிராமல் இல்லை.

பெண்ணிருக்குமிடம் வந்து ஆண் சம்பந்தம் செய்துகொண்டு தங்கிவிடும் வழக்கு பின்னர், பொன்னோபொருளோ கொடுத்து அழைத்துச்செல்லும் நடைமுறைக்கு வந்ததும், இந்நாள் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும்கூட,