உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 காலந்தோறும் பெண்

இசைகிறது. இந்த நியதியை ஒரு பெண் தனிமனித நிலையில் நின்று உடைக்க முடிந்திருக்கவில்லை, இதுகாறும்.

எனது இளந்தோழியின் வீட்டார் என்ன நினைக்கிறார்கள்? இங்கும் மூன்று தலைமுறைக்காரரின் கருத்துக்கள் குடும்பத்தில் மோதி, பிரச்சனைகளை ஆழமாக்குகின்றன. படிப்பாவது, இன்னொன்றாவது? வயது இருபத்து நான்கென்றால், இதற்குள் திருமணம் முடிந்து ஒரு குழந்தையை ஏந்தியிருக்க வேண்டும். இனிமேலும் தாமதமா? எப்படியேனும் திருமணத்தை முடித்தாக வேண்டும். இல்லையேல் குடிமுழுகிப் போய்விடும்... என்பது மூத்த தலைமுறைப் பிடிவாதங்கள்.

அடுத்த தலைமுறைக்காரரான பெற்றோரோ, அரும்பாடுபட்டு, மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்து, அவளை எத்தனை நெருக்கத்தினூடே படிக்க வைத்திருக்கிறார்கள். மகளின் ஆர்வமும், அறிவுத் திறனும் துலங்க ஊக்கம் கொடுத்து, அவளை முழுமையாக விளங்கச் செய்திருக்கிறார்கள். எனவே அவள் விருப்பப்படியே மேலும் இன்னும் சிறப்புப் பயிற்சி பெறவும், தொழில் புரியவும் அநுமதிக்கவில்லையெனில் தவறு என்று கருதுகிறார்கள்.

ஆனால் திருமணம் என்ற நிகழ்வு தம் மகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலே போய்விடுமோ என்று அஞ்சவும் அஞ்சுகிறார்கள். அவளுக்குரிய கணவரைத் தேட வேண்டும்.

அங்கும் பிரச்னை இருக்கிறது. அவன் இவளுக்கு முழு உரிமை அளிப்பானா? சமமாக நினைப்பானா? தொழில் ரீதியான பொறாமை வேறு தூபம் போடாமல் இருக்குமா? இவள் கிராமத்தில் பணிபுரிவதை அநுமதிப்பானா? ஒத்துழைப்பானா? இவள் தனித்திறமையை மதித்துப் பெருமை கொள்வானா?