உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 காலந்தோறும் பெண்


அடுப்பருகே செல்கிறது. அவள் கத்தினால் கணவனின் உறக்கம் கலைந்துவிடும். அவன் தலையை அசைக்கும்படி இம்மியும் நகரலாகாது; நகர்ந்தால் இவளுடைய “பதிசேவை”க்குப் பங்கம் வந்துவிடும், ஆனால் மறுபக்கம் குழந்தை. வினாத் தெரியாத குழந்தை; அது நெருப்பை நாடிப்போகிறது. கணவன் சேவை உயர்ந்ததா? குழந்தை உயிர்பெரிதா? சந்தேகமென்ன? பதி சேவைதான் பெரியது. மனசோடு அவள் அக்கினித் தேவனை வேண்டிக் கொண்டாளாம், “தேவனே! என் குழந்தையைச் சுட்டு விடாதே! அவனுக்குச் சந்தனமாகக் குளிர்ந்திடு” என்று அவள் இறைஞ்ச, இவளுடைய பதி சேவையைப் போற்றும் வகையில் அக்கினித் தேவன் குழந்தையைச் சுடாமல் இருந்தானாம்.

பெண்மை என்ற முழுமையில் விகசிக்கும் முதல் இயல்பாம் தாய்மைக்கும் கற்பு வளையமிட்டுப் பிணிக்கும் இத்தகைய சிந்தனையின் ரேகையும்கூட ருக்வேதப் பாடல்களில் இல்லை.

வேத காலத்துக்கும் முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் மனிதர் வழிபட்டதாகக் கருதப்படும் பிரதிமைகள் சில உண்மைகளைத் தெரிவிக்கின்றன. பெண்ணுருவும்; கிளைத்து வரும் செடி போன்ற வடிவமும், பூமிவண்மை, மற்றும் மக்கட்குலம் பெருக்கும் தாய்மை இரண்டையுமே சுட்டுகின்றன. ஆனால் ருக்வேதப் பாடல்களில் உண்மையான மாறும் வடிவில், பெண்மையின் பல்வேறு இயல்புகளும் தாய்மைக்கு இலக்கணமாகத் திகழும் பண்புகளும் கவினுற வருணிக்கப்படுகின்றன; சில தெய்வீக வடிவங்களைப் பார்ப்போம். அதிதி என்ற தேவதை தாயின் முழுவடிவாகப் போற்றப்படுகிறாள். அதிதி என்ற சொல்லுக்கு எல்லையற்றவள், கட்டுப்படாதவள், சுதந்திரமானவள் என்று பொருள். செவிச்செல்வம் பழுதானவர் அதற்குரிய