உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 37

மருத்துவரிடம் சென்றால் அவரே காது கேட்க ஒரு கருவியைப் பொருத்திக் கொண்டு எதிர்ப்பட்டால் நம்பிக்கை விழுமா?

எனவே இந்தத் தாய்த் தேவதை எல்லையற்ற செல்வாக்குடையவளாக மூப்பும் வாட்டமும் அறியாதவளாக விளங்குகிறாள். மிகவும் அக்கறையுடன் மக்களைப் பேணி நல்வழி நடத்திச் செல்லும் திறமையும் கருணையும், அன்பும் உடையவளாக இருக்கிறாள். இவள் மித்ரன், வருணன், அர்யமான், இந்திரன் அதித்தயர்களாகிய நிகரற்ற புதல்வர்களின் அன்னை.

இந்த அதிதியாம் தேவதை எண்பத்தெட்டு பாடல்களில் போற்றப்படுகிறாள். ஆனால் இவளுடைய புதல்வர்களாகிய ஆதித்யர்களுடனே (அதிதியின் மைந்தர்கள்) இவள் வருணிக்கப்படுகிறாளே ஒழிய, கணவனுடன் காட்சி தருபவளாகக் குறிக்கப்படவில்லை. ஆனால் வசுக்களின் புதல்வியாகவும், ஆதித்யர்களின் சகோதரியாகவும் குறிக்கப்படுகிறாள்.

ருக்வேத பாடல்கள், பல்வேறு காலங்களில் பல்வேறு கவிக்குரவர்களால் பாடப்பெற்றவை. ஆசிரியர் இந்தியாவுக்குள் வந்து தங்களை இம்மண்ணுக்கு உரியவர்களாக்கிக் கொள்வதற்கு முன்பே புனையப்பெற்ற பாடல்களும் அதில் உண்டு என்று கருத்துரைப்பாரும் உண்டு. பெண்மையின் நல்லியல்புகள், மகள், சகோதரி, அன்னை என்ற உறவு நிலைகளில் பொருந்துவதையே இங்கு அருமையாகக் காட்டப்படுகிறது.

மனிதப் பிறவியின் துன்பங்கள், பாவங்களில், இருந்து விடுபட, இந்த அதிதியாகிய தாயே துதிக்கப்படுகிறாள். இவள் மாந்தரின் உடல்பரமான துன்பங்களை மட்டுமின்றி, உள்ளங்களின் கசடுகளையும் நீக்க வல்லவள். இயற்கையில் இனிய காட்சிகளும், வண்மை வரிசைகளும், இந்தத் தெய்வீகம் செறிந்த அன்னையின் ப்ரதிபிம்பங்களே. இவளே சுவர்க்கம்; இவளே ஆகாயம்; இவளே ஒளி; இவளே காமதேனு;