உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 காலந்தோறும் பெண்

என்று துதிக்கப் பெறுகிறாள். அன்னை என்ற முழுத் தன்மைக்குரிய பல்வேறு பரிமாணங்களை இவ்வாறு பல தேவதைகளில் உருவகப்படுத்திப் பாடல்களை யாத்திருக்கின்றனர், அந்த ஆதிகவிகள்.

உஷஸ் அல்லது உஷா மிக அழகான தேவதையாக வருணிக்கப் பெறுகிறாள். ருக் வேதத்தில் இவளுக்கு இருபது பாடல்கள் இருக்கின்றன. இவள் பெயர் முந்நூறு இடங்களில் குறிக்கப்படுகின்றன. இவள் வானுக்கும் ஒளித் தெய்வத்துக்கும் பிறந்த மகளாக உருவகப்படுத்தப்படுகிறாள்.

காலையில் எழுந்ததும் வீட்டின் செல்வ மகள் எப்படி இயங்குகிறாள்?

வானிலே திரியும் இந்த எழில்மிகு ஒளிக்கன்னி கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் மாட்சியைக் கண்டு இவளில் மனம் பறிகொடுக்காதவருண்டோ?

விண்ணகத்து நன் மகள் நம் முன் தோன்றினாள்
எழிலார்ந்த உடைகளணிந்து இன்பப் பூரிப்புடன்
மண்ணகத்துப் பெருநிதியாம் பொன்னொளிப் பாவை
மங்களக் கன்னியே, உதயமே எம்மீது இந்நாள்
செம்மை பொழிவாய்.
 
வானின் விளிம்புகளெல்லாம் ஒளிவெள்ளம் பாய்ச்சி
இருளின் துகில்களை விலக்கி எறிந்தனள். பொன்னின் குதிரைகளின் குளம்படி ஏரியில் பூதலம் ::விழித்தெழ,
உதய கன்னிதன் நற்றேர் ஏறி வந்தனள்
எழுமின் மூச்சுக் காற்றே!! உயிர் நம்மை மீண்டும் ::வந்தடைந்தது
இருள் தொலைந்து ஒளி பாய்ந்து பரவுகிறது.
கதிரோனின் பயணத்துக்குக் கட்டியம் கூறி
ஒளிமகள் பாதை அமைக்கிறாள்; நீண்டு வாழ்வோம்