டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
23
குறி உதையின் மூலம், நேரே பந்தை இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெற முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
7. முனை உதை (Corner-Kick)
தாக்கும் குழுவைச் சேர்ந்தவர்கள், எதிர்க்குழு பகுதியிலுள்ள கடைக்கோட்டைக் கடந்து போகுமாறு வெளியில் உதைத்து ஆடிவிட்டால், மீண்டும் பந்தை ஆட்டத்தில் இடுவதற்கு குறி உதை மூலம் தொடங்க வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.
அதுபோலவே, தடுக்கும் குழுவைச் சேர்ந்தவர்கள் தாங்கள் காக்கும் ஆடுகளப் பகுதியின் கடைக்கோட்டைப் பந்து கடந்து வெளியே செல்வதற்குத் தாங்களே காரணமாய் இருந்துவிட்டால், மீண்டும் வெளியே போன பந்தை ஆட்டத்தில் இடுவதற்காகவும், தடுத்தாடிய குழுவிற்குத் தண்டனையாகவும் தரப் படுவதற்கே 'முனை உதை' என்று பெயர்.
எந்தப் பக்கமாகப் பந்து கடைக்கோட்டைக் கடந்து சென்றதோ, அந்தப் பக்கத்தில் கடைக்கோடும் பக்கக் கோடும் சந்திக்கும் முனையில் உள்ள கால் வட்டப் பரப்பினுள்ளே பந்தை வைத்து, தாக்கும் குழுவினரில் ஒருவர், அந்த நிலைப் பந்தை உதைத்தாடி, ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
இந்த முனை உதையின் மூலம், பந்தை நேராக இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியும். தடுக்கும் குழுவினர், பந்திருக்கும் இடத்தில் இருந்து 10 கெஜ தூரத்திற்கு அப்பால்தான் முதலில் நிற்க வேண்டும்.