பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கெடிலக்கரை நாகரிகம்


கேட்டால் நீண்டு பருத்த மரம் போல் வாட்டசாட்டமான உடல்: உரம் மட்டும் பெற்று, உள்ளப் பண்பும் உயிர்ப் பண்பும் பெற்றிராதவரை மாந்தராக அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனை ‘மக்களே போல்வர் கயவர்’ ‘மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லா தவர்’ என்னும் திருக்குறள் பகுதிகளால் தெளியலாம்.

உருவத்தால் பெரியவராயினும் மக்கட் பண்பு இல்லாத மாக்களைவிட, உருவத்தால் சிறியவராயினும் சிறந்த உள்ளப் பண்பும் உயரிய உயிராற்றலும் உடையவர் மிகவும் மதிக்கத்தக்கவர். இதுபோலவே, ஓர் ஆறு உருவத்தால் சிறுத்திருப்பினும், துறைமுகப் பெருமை, ஊர்ப் பெருமை, பெருமக்கள் பெருமை, தலைநகர்ப் பெருமை, அரசாட்சிப் பெருமை, கோயில் பெருமை, நீராடல் பெருமை, பாடல் பெருமை, பழைய இலக்கியப் பெருமை, கல்விப் பெருமை, கலைப் பெருமை, நீண்டகால வரலாற்றுப் பெருமை, உயர்ந்த நாகரிகப் பெருமை முதலிய பெருமைகளைப் பெற்றிருப்பின், மிகப் பெரிய ஆறுகளைக் காட்டிலும் அது மிக உயர்ந்ததேயாம்.

ஓர் ஆற்றுக்குத் தலைநகர்ப் பெருமை, வரலாற்று நாகரிகப் பெருமை முதலியன அமைந்திருப்பது, ஒரு மனிதர்க்கு உயர்ந்த உள்ளப் பண்பும் உயிர் ஆற்றலும் அமைந்திருப்பது போன்றதாகும் என்னும் கருத்தைப் புரிந்து கொண்டால், உருவத்தால் சிறிய ஆறாகிய நமது கெடிலத்தின் ‘எவரெஸ்ட்’ பெருமையை எவரும் ஏற்றுக் கொள்வர். இந்த அடிப்படையிலேயே கெடிலத்தைப் பற்றிய இந்நூல் எழுகிறது.

மிகப் பெரிய இமயமலையைப் பற்றி மட்டும் உலகத்தில் ஆராய்ச்சி நடக்கவில்லை; கண்ணுக்குப் புலப்படாத மிகவும் சிறிய அணுவைப் பற்றியும் ஆராச்சி நடக்கிறது; அவ்வணுவுக்குள் அளவற்ற ஆற்றல் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தவும் படுகிறது. விண்ணில் கண்ணுக்குத் தெரியும் மிகப் பெரிய ஞாயிற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோடு அறிஞர்கள் அடங்கிவிடவில்லை; கண்ணுக்குத் தெரியாத மிக மிகச் சிறிய விண்மீன்களைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்தத்தான் செய்கின்றனர்.

எனவே, அமேசான், மிசிசிப்பி, கங்கை, நைல், காவிரி முதலியவற்றோடு ஆறுகளைப் பற்றிய நூல்கள் அமைந்து விட வேண்டியதில்லை; அப்பர் பெருமானால் ‘தென் கங்கை’ என்று சிறப்பிக்கப்பெற்றுள்ள கெடிலத்தைப் பற்றியும் ஆராய்ச்சி நூற்கள் எழவேண்டியதுதான்! அந்தப் பணியின் ஒரு கூறே இந்நூலின் எழுச்சி!