பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கெடில நதி நாகரிகம்

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்


உலகின் சிறந்த நாகரிகங்கள் ஆற்றோரங்களிலே தோன்றியுள்ளன. ஆற்றின் வெள்ளப்பெருக்கு நிலத்தை வளப்படுத்துவதோடு மனிதகுல நாகரிகத்தையும் வளப்படுத்தியுள்ளது. ஆற்றோரம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும் மருதநிலமாகும். மருத நிலத்து மக்கள் நிலம் திருத்தி, பயிர் வளர்ப்பதோடு பண்பாட்டையும் வளர்த்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

அறிஞர் அண்ணா அவர்கள் 'ஆற்றோரம்' எனும் தலைப்பில் நாகரிக வளர்ச்சி பற்றி ஒரு பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை 'ஆற்றங்கரையில்' எனும் நூலில் தமிழ் நாகரிகம் வளர்ந்து செழித்த கதையை வரைந்துள்ளார்.

நைல் நதி நாகரிகம், தேம்ஸ் நதி நாகரிகம் என அயல் நாடுகளில் நாகரிகம் ஆற்றோடு இணைத்துப் பேசப்படுகின்றது. இந்தியாவின் வடபகுதி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம், கங்கைச் சமவெளி நாகரிகம் என ஆற்றின் பேரால் அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் திருநெல்வேலியும், வைகைக் கரையில் மதுரையும், காவிரிக் கரையில் உறையூர், திருச்சி, திருவரங்கம் ஆகியனவும் பாலாற்றங்கரையில் காஞ்சியும் ஆறுகள் வளர்த்த பண்ணைகளாகச் செழித்துள்ளன. இந்நகரங்களின் தோற்றமும், எழுச்சியும், வளர்ச்சியும் ஆறுகளின் கொடையே.