20
சடுகுடு ஆட்டம்
ஆர்வமுள்ள மக்கள் தம் ஆற்றலையும் ஆண்மையையும் கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் போற்றும் வண்ணம் காட்டிவிட வேண்டும் என்ற வேகத்தில், புகழ் வெறியில் அளவுக்கு மீறி ஆடிடும் போதும், உடல் தொடர்புள்ள ஆட்டம் இது என்பதால், உணர்ச்சிப் பெருக்கின் விளைவாக விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டு விடுகின்றன என்பதாலும், இதைக் கூச்சலிடும் ஒழுங்கற்ற கூட்டம் என்று கூறினார்கள் போலும்.
இது மக்கள் விரும்பும் மக்களுக்கான ஆட்டம் என்பதால்தான், அவர்கள் அறிவுக்கேற்ப, ஆர்வத்திற்கேற்ப, ஆட்ட முறைகள், விதிகள் அனைத்தும் அவ்வப்போது அவரவர்கள் ஆசைக்கேற்ப வளைந்து கொடுத்திருக்கின்றன என்பதை சடுகுடு ஆட்ட முறைகளைக் காணும்போது நமக்குப் புலனாகின்றன. அத்தனை ஆட்ட முறைகளையும் ஆட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து, அவற்றில் முக்கியமான மூன்று ஆட்ட முறைகளை நமக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.
முக்கியமான மூன்று பிரிவுகள்
சடுகுடு ஆட்டத்தில் முக்கியமான மூன்று பிரிவு ஆட்ட முறைகள் இருந்தன. ஒன்று சஞ்சீவணி ஆட்டம் அல்லது சாகா வரம் பெற்ற ஆட்டம். இரண்டாவது: ஆடாது ஒழிதல் என்னும் காமினி ஆட்டம். மூன்றாவது: தொடர்ந்து ஆடுதல் என்னும் அமர் ஆட்டம். இனி இந்த மூன்று பிரிவு ஆட்ட முறைகளையும் இங்கு விளக்கமாகக் காண்போம்.