உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

27


வழியேயில்லை என்ற முடிவுக்கு வந்த டெக்கான் ஜிம்கானாவைச் சேர்ந்தவர்கள், பகீரத முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் பயனாக, 1923 ஆம் ஆண்டு பரோடாவைச் சேர்ந்த விஜய் ஜிம்கானாவின் வல்லுநர்கள் குழு ஒன்று கூடி, புதிய விதிமுறைகளை சிறப்புற வகுத்து வழியமைத்தது. அதனைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் போட்டிகளை நடத்திடவும் முடிந்தது. துணிவாக இயற்றிய விதிகளைத் தொடர்ந்து, கருத்தரங்குகள் பல கூட்டப்பெற்று, ஆட்டம் ஆக்கம் பெறத்தக்க அளவில் ஆலோசனைகளையும் மேற்கொண்டனர்.

மூன்று முறை விதிகளைத் திருத்தி அமைத்தாலும், மக்கள் மன திருப்திக்கும் ஆட்ட வளர்ச்சிக்கும் என்று போதுமான அளவில் முழுமை பெறவில்லை என்ற எண்ணத்தின் காரணமாக, 1931 ஆம் ஆண்டு அகில மகாராஷ்டிர சரீரிக் பரீஷத் எனும் உடற்பயிற்சி இயக்கத்தின் மூலமாக, வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விதிகளில் செழுமை கூட்டுமாறு வேண்டிக் கொண்டது.

அதன் விளைவாக 1934 ஆம் ஆண்டு, மேலும் புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. அவை புதுப்பிக்கப்பட்டு, நூலாக வெளிவந்தன. நாளாக நாளாக, விளையாட்டில் வருகின்ற பிரச்சினைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்ட உடற்பயிற்சிக் கழகம், மேலும் பல விதிகளை மாற்றியும், மெருகூட்டியும் ஆட்டத்தின் மேன்மைக்கும், மிகுந்த வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் உதவியது.