உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சமுத்திரக் கதைகள்


செய்யறதுல என்ன தப்பு..? நீங்க இவள மாதிரி செய்யாம இருக்கதுதான் தப்பு.”

“சரி எங்களயும் ஒரு வழி பண்ண பாக்கே. ஒன்பாடு... ஒன் மருமவ பாடு... சர்க்கார் பாடு...”

“அப்படி நாம விடமுடியுமா? காரியக்கார ஆளுக வந்தா நம்ம முதுகுலயும் கல்லேறுமே... கண்ணால கண்டத சொல்லணுமுன்னு தமுக்குக்காரன் சொல்லிட்டுப் போயிருக்கானே’

ரவிக்கைக்காரி, அந்தப் பெண்களைச் சிறிப் பார்த்தபோது, ஒருத்தி, இன்னொருத்தியின் இடுப்பில் கிள்ள, அவள் மற்றவளின் தோளைக் கிள்ள அது தொடர்கிள்ளல்களாக, அத்தனை பெண்களும் கிழக்கு பக்கமாய் எக்கிப் பார்த்துவிட்டு, அங்குமிங்குமாய் சிதறி ஓடினார்கள்.

அங்கிருந்து, பத்து. பதினைந்து ஏவலாட்கள் புடைசூழ வந்த வலிய கணக்கெழுத்து வேலப்பனும், மணியம் கச்சேரி தானுலி ங்கமும் தங்கள் பக்கமாய் ஓடிவந்த பெண்களை சவுக்காலும், பிரம்பாலும் 'விளையாட்டாக' விளாசினார்கள். உடம்பை புடைக்கவைக்கும் வினையான விளையாட்டு. அந்தப் பெண்களும் வலியைப் பொறுத்துக் கொண்டு, ஏதோ மகத்தான பட்டம் ஒன்றை பெற்றதுபோல் வலியச் சிரித்துக் கொண்டே ஓடினார்கள்.

இதற்குள் பூமாரி உஷாரானாள். ரவிக்கைக்கார மருமகளை ஆறடி உயர வீட்டின் மூன்றடி வாசலுக்குள் கூனிக்குறுக்கி திணித்துவிட்டு, பனைமட்டக் கதவைச் சாத்தினாள். பதநீர் பானையைப் பதம் பார்ப்பதுபோல், பாசாங்கு போட்டாள். நிறைபானை பதநீர், கொதித்து கொதித்து, சுண்டிச் சுண்டி கூப்பனியாகி பானையின் கால்பகுதி வரை சுருங்கியது.

திடீரென்று 'ஏய்' என்ற சொல்லோடு காலில் பிரம்படியும், முதுகில் சவுக்கடியும் பெற்ற பூமாரி ஏறிட்டு பார்த்தாள். உடனடியாய் எழுந்தாள். இடது கைகைய மார்பில் குறுக்காய் மடித்து, வலது கையை கொண்டு வாயில் பாதியை மூடியபடியே 'ஏமானே ஏமானே' அடியேன் என்ன செய்யனும்" என்று அரற்றினாள்.