பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

மன்னர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டு பெருநில மன்னர்களாகச் சிறப்படைய விரும்புவதும், பெருநில மன்னர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு பேரரசுகளாக விளங்க விரும்புவதும் அக்கால மன்னர்களின் சிந்தனைப் போக்காக இருந்திருக்கிறது. அதற்கான போர்ப் படைகளைத் தயாரிப்பதும், போர்களை நடத்துவதும் அம்மன்னர்களின் இயல்பாகப் பெரும்பாலும் இருந்திருக்கிறது. அதையே வீரத்தின் சின்னமாகவும், புறப்பொருள் இலக்கிய நூல்கள் பலவும் விவரித்துக் கூறுகின்றன.

இவ்வாறாகவே மூவேந்தர்களின் வீரமும், போர்ப்படை பலமும் சிந்தனைகளுங்கூட விவரிக்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரக் காப்பியமும் மூவேந்தர்களைப்பற்றிக் கூறும்போது, அவர்களுடைய எல்லையை இமயம்வரை விரிவுபடுத்துவதில் எண்ணம் கொண்டவர்களாகவும் இமயத்தில் தங்கள் புலிக்கொடி, மீன் கொடி, விற்கொடிகளைப் பொறித்ததாகவும் கூறுகின்றது. இதில் மூவேந்தர்களின் வீரமும், இமயம் வரையிலுமான பாரத நாட்டின் ஒற்றுமை உணர்வும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.

இந்திய இலக்கியங்கள் பலவும், அரசியல் நெறிமுறைகளில் அரசர்கள் தங்கள் குடிமக்கள்பால், நாட்டின்டால், நாட்டுமக்களின்பால் அன்பு செலுத்தி, மக்களை உயிராக மதித்து, மக்களுடைய நலன்களின்பால் செய்ய வேண்டிய நல்லாட்சியின் கடமைகளை, செங்கோலாட்சியின் கடமைகளைப் பற்றியெல்லாம் விவரித்துக் கூறுகின்றன. போர்களைத் தவிர்த்து, நீர் நிலைகளைப் பெருக்கி அமைதி வழிகளில் சிந்திக்கவும் நமது இலக்கியங்கள் அரசியல் நெறிகளை எடுத்துக் கூறுகின்றன. சிலப்பதிகாரக் காப்பியமும் அத்தகைய அரசியல் அறநெறிகளைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

திவ்யப்பிரபந்தத்தில் ஆழ்வார்கள் நூற்று எட்டு திவ்ய தேசங்களைப்பற்றிப் பாடியுள்ளார்கள். அந்தத் திருப்பதிகள் சோழ நாட்டில் 42-ம், பாண்டிய நாட்டில் 18-ம், மலை