பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 25




கங்கா மாறினாள் ; அது, அவள் சொந்த விஷயம். ஆனால், அவள் முரண்பட்டபோது, உயிரிழந்த சித்திரம் ஆகிவிட்டாள் அதுவே அவளுக்கு விதியாகவும் ஆயிற்று! கங்காவின் சமர்த்து யாருக்கு வரும் ?-அவளுக்கு விதியும் இல்லை : தெய்வமும் கிடையாது !.-ஒரு வேளை, அவளுக்கு அவளே விதியாக ஆகியிருக்கலாம். ஆனால், அவள் ஒரு நாளும் விதியின் நாயகியாக ஆக முடியாது 1அவள் ஒரு கதாநாயகி !... ஆமாம்; சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும்படியான உணர்ச்சிக் கோவையின் ஆசை நாயகிதான் மிஸ் கங்கா !

உண்மையே தான்-கங்கா ஒரு நல்ல மனித நாடகம் தான் !

ஆனால்..

கங்கா என்கின்ற இந்த மனித நாடகத்துக்கு, சராசரியான மனிதப்பெண்ணாகவும், முதன்மை பெற்ற நாடகக்காரியாகவும், விசித்திரமான கதைத் தலைவியாகவும், பிரபு என்னும் ஓர் அயோக்கியனின் காமவெறிக்குப் பலியான அபராதிக் கன்னியாகவும் அமைந்த-அமைக்கப் பட்ட ஜெயகாந்தனின் கங்காவிற்கு இந்தத் தமிழ்ச் சாதியிலே- இந்தத் தமிழ்ச் சமூகத்திலே- இந்தத் தமிழ்ச் சமூக இலக்கியத்திலே உரிய இடம் என்ன, பங்கு என்ன, அந்தஸ்து என்ன ?

நமது அருமைத் தமிழ்ச் சமூகத்தின் குற்றவாளிக் கூண்டிலே நின்று கொண்டிருக்கின்ற கங்காவின் ஜெயகாந்தனுக்கு இந்தத் தமிழ்ச் சாதியிலே-இந்தத் தமிழ்ச் சமுதாயத்திலே-இந்தத் தமிழ்ச் சமுதாய இலக்கியத்திலே வழங்கப்பட்ட - வழங்கப்படுகிற - வழங்கப்படும் மரியாதையின் பாகம் எத்தனை ? அந்தஸ்து என்ன ? இடம் எவ்வளவு ?

சுத்தமான இலக்கியப் பிரச்சினையைத் தட்டி எழுப்பித் தூண்டி விடக் கூடிய கேள்விகள் அல்லவா இவை ?