பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

மாடமாளிகைக் கூடகோபுரங்களிடையே கூரை குறைந்த குடிசைகளும் கிடந்தன வென்று சங்கப் பாடல்களால் அறியலாம். விதியின் சதியால் பொருட் செல்வம் குறைந்தவிடத்தே மக்கட் செல்வம் நிறைந்து தோன்றும். காதல் வாழ்க்கையைக் கவின் பெறத் தொடங்கிய கண்ணகிக்கு மகப்பேறு குறிக்கப்படவில்லை. மாதவிக்கும் ஒரு தனிமகளேயாவாள் மணிமேகலையும். ஆனால், வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் மனைவியோ "மருங்கிற் பல்குறு மாக்களை” யுடையவளாகக் காட்டப் பெறுகின்றாள். அம்மடந்தை, உணவின்மை காரணமாகத் தன் குழந்தைக்கு இயற்கையுணவாய பால் கொடுக்க இயலாது போகவே, செயற்கையுணவாய சோற்றினை நாடிச் சென்ற அக்குழந்தை உள்ளே வெற்றுக்கலனே யிருக்கக் கண்டு பசியால் அழ, அவ்வழுகையை நிறுத்த மறப்புலி கூறிப் பயப்படுத்திப் பார்த்தாள்; மதியங்காட்டி நயப்படுத்தவும் இயலாது, "நின் தந்தை வந்தால் எங்ஙனம் முகத்தில் சினங்கொள்வாய் காட்டு” எனக் கேட்டும் பார்த்தாள். குழந்தையின் பசித் துன்பங்கண்டு, கண்கலங்கி நிற்கும் காட்சி ஒருபுறம் (புறம் 160). இதற்கு முற்றிலும் மாறாக மற்றொரு காட்சியும் உண்டு. செல்வக் குடியானதால் பெற்ற தாய் ஒருபுறம் வீற்றிருக்க, வளர்ப்புத் தாயான செவிலித்தாய், தேன் கலந்த பாற்சோற்றினைப் பொற் கிண்ணத்தில் வைத்துக் கொண்டு சிறுகோலோச்சி அச்சுறுத்தியும், செல்வக் குழந்தையாதலின் பசியின்றி உண்ண மறுத்துக் காற்சிலம்பதிரத் தோட்டப் பந்தலின் முன்னும் பின்னுமாக ஓடி யாடும் காட்சி மற்றொரு புறம்.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்