பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பொருளு மென்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற், காமக் கூட்டமெனவும், அன்பினைந்திணைக் களவெனப்படுவது” எனவும், களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர், உளநிகழ் அன்பின் உயர்ச்சி மேன எனவும் அன்பின் அடிப்படையாக அகத்துட் பிறப்பதொன்றாம். இவ்வன்பு ஒழுக்கத்தில் ஈடுபடும் தலைமக்கள் அதற்குயிர் நிலையாய அன்பால் ஒத்திருப்பர். அன்றியும்,

“பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
திறையே அருளே உணர்வொடு திருவென"ப்

பத்து வகை ஒப்புமைகளைக் கொண்டு விளங்கும் தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும். அடுப்பவுமின்றி ஊழ்வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கலக்கும் முறையே தலையாயதெனப் புலனெறி வழக்கத்தில் பயிலும். "பிறர்க்குரித்தென்று இரு முதுகுரவரால் கொடை எரிந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த"தால் களவாயிற்றென்பர் நச்சினார்க்கினியர். மேலும், "ஒத்த அன்பினராய் இன்பத் துறையில் நின்று இல்லறம் புரிந்தாரைப் பின்னர் வீடு பேற்றின்பம் உறுமாறு வஞ்சித்துக் கொண்டு சென்று நன்னெறிக்கண் நிறீஇனமையால் களவியல்” ஆயிற்றெனக் காரணங் காட்டுவர் இறையனார் அகப் பொருளுரையாசிரியர். அன்றியும். இருவர் உள்ளமும் தத்தமது ஒழித்து, மற்றவர் இடத்தை அவர் அறியாது கொள்ளை கொண்டு தங்குதலான் இவ்வொழுக்கம் களவெனும் பெயர் பெற்றது பொருத்தமாகின்றது. எனவே, தமிழ் நாட்டில் குலம் தொழில்