44
தமிழ் இனம்
பாலையின் பண்பு
களவில் தலைவி தலைவனோடு உடன் போக்கு வைத்துக்கொள்ளும்போதும், தலைவனை விட்டுத் தலைவி பிரிந்திருப்புழியும் உண்டாகும் பிரிவு பாலை எனப்படும். தலைவன் பிரிவால் தலைவி நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உற்றிருப்பாள். ஆதலின், இந்நிலைமை பாலை நிலத்துக்கு ஒப்பாக்கப்பட்டது. “ என் தலைவன் அடிக்கடி என் கண்களையும் தோள் களையும், என் கூந்தலையும் பாராட்டி நேற்றுவரை இவண் இருந்தான் ; இன்று பிரிந்தான் ; அவன் மரங்களற்ற பாலை நிலத்துக்குச் சென்றான். அந் நிலமோ, கடல்போலப் பரந்தது ; பேய்த் தேரைத் தண்ணிர் என்று மான் அருந்தச் செல்லும் அமை வுடையது, ‘ என்று தலைவி வருந்துவதாகக் கீழ் வரும் செய்யுளால் உணரலாம் :
"கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும்
திதலை அல்குலும் பலபா ராட்டி
நெருநலும் இவணர் மன்னே ; இன்றே
பெருநீர் ஒப்பிற் பேஎய் வெண்தேர்
மரனில் நீளிடை மானசை உறூஉம்
சுடுமட் டசும்பின் மத்தந் தின்ற
பிறவா வெண்ணெ யுருப்பிடத் தன்ன
உவரெழு களரி ஒமையங் காட்டு
வெயில்வீற் றிருந்த வெம்பலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே".
—நற்றிணை, 84.
இப்பாவால் உண்மைக் காதலியின் உள்ளம் இத் தன்மையது என்பது இனிது விளங்கக் காணலாம்.