உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xviii

அனுபவங்களைக்கொண்டும், எட்டு ஆண்டுகள் பி. டி. மாணாக்கர்கட்குத் தமிழ் கற்பிப்பதைப்பற்றிப் போதித்துவந்த அனுபவத்தைக்கொண்டும் இப்புத்தகம் எழுதப் பெற்றுள்ளது. எழுதி முடிக்க இரண்டாண்டுகள் ஆயின. இப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பல கருத்துக்களையும் நன்கு சிந்தித்து நடைமுறையில் செயலுக்குக் கொண்டுவந்தால் மாணாக்கர்களிடம் தமிழ்மொழியறிவு நன்முறையில் அமைவது உறுதி என்று எண்ணுகின்றேன் ; நம்பிக்கையும் கொள்கின்றேன். முறைகளைக் கூறுவது எளிது; அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவந்து வெற்றி காண்பது மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும், முயற்சியையும், அவர்களின் திறனேயும், ஈடுபாட்டையும் பொறுத்துள்ளது.

இப் புத்தகம் பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. முதல் அத்தியாயத்தில் தமிழ் கற்பிப்பதன் நோக்கங்கள் ஓரளவு விரிவாக ஆராயப்பெற்றிருக்கின்றன. இரண்டாவது அத்தியாயத்தில் இந் நோக்கங்கள் நடைமுறையில் நிறைவேறுவதற்கான பாடத்திட்டங்கள். பற்றியும் நடைமுறையிலுள்ள தொடக்க, இடை, உயர்நிலைகளிலுள்ள பாடத்திட்டங்கள் பற்றியும் விளக்கம் தரப்பெற்றுள்ளது. நமது மாநிலத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பெறும் மாணாக்கர்கள் பயிலவேண்டிய மொழிகள்பற்றியும் விளக்கம் கொடுக்கப்பெற்றிருக்கின்து. மூன்றிலிருந்து ஆறு முடியவுள்ள அத்தியாயங்களில் பயிற்றுவதற்கு மேற்கொள்ளப்பெறும் பல்வேறு முறைகளேப்பற்றிய விதிகளும் விவரங்களும் தரப்பெற்றிருப்பதுடன் தமிழ்மொழி பயிற்றுங்கால் அவற்றை எவ்வெவ்வாறு கையாளலாம் என்பதும் விளக்கப்பெற்றிருக்கின்றது. ஏழிலிருந்து பன்னிரண்டு முடியவுள்ள அத்தியாயங்கள் கூறப்பெற்ற விதிகள் முதலியவற்றைத் தமிழாசிரியர்கள் நடைமுறையில் எவ்வெவ்வாறு கையாளலாம் என்று எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கப் பெற்றிருக்கின்றது. இவை யாவும் முடிந்த முடிபுகள் என்று எவரும் நினைத்தல் வேண்டா. இவற்றை நடைமுறையில் கொண்டுவரும்பொழுதுதான் உண்மையான சங்கடங்கள் தென்படும். முறைகளையும் அவற்றிற்-