உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர்”

ஆகவே, வடமொழிச் சிவாகமம் போலவே, தமிழ் ஆகமமாகிய திருமந்திரம், சிவபரத்துவத்தையும், சிவனை வழிபட்டு இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் அடையும் நெறியையும் நன்கு விளக்குகின்றது. அதனல், சைவாகமத்தைப் போலவே திருமந்திரத்திலும், ‘சரியை, கிரியை, யோகம், ஞானம்’ என்னும் நான்கும் இனிது எடுத்துக் கூறப்படுகின்றன. மேலும் இந் நூலால் குருபாரம்பரியச் சிறப்பும் அறியப்படுகின்றது.

ஆகமங்களுக்குரிய ‘தந்திரம்’ என்னும் பெயரால் அமைந்த ஒன்பது உட்பிரிவுகளை உடைய இந்நூல், அவற்றின் உட்பிரிவாகிய அதிகாரங்கள் பலவற்றை உடையதாய், அறநெறி, அருள் நெறி பற்றிய உண்மைகள் பல வற்றையும் உணர்த்தும் நிறைவுடைய சிவநெறி நூலாக உள்ளது.

இதனை ஆசிரியர் திருமூல தேவர், சித்தர் மொழி நடையில் அருளிச் செய்திருப்பதால், எளிதில் பொருள் உணர இயலாது, ஆழ்ந்து சிந்தித்தும், உபதேச முறையிலும் உணர வேண்டியுள்ளது. மூவாயிரம் பாடல்களை உடைய இவ்விரிந்த நூலில், இன்றியமையாத பாடல்களாகச் சிலர் சில திரட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இம்முறையிலே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் துணைப் பேராசிரியர் திரு க. வெள்ளை வாரணனார், பலரது விருப்பத்தின்படி இத் திருமந்திரத்தின் சிறந்த பாடல்களை எடுத்து ‘அருள் முறைத் திரட்டு’ எனத் திரட்டி இருத்தல் பயன் தரத்தக்க ஒன்ருகும்.