உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஒன்றும் குறி-பொருந்தும் அடையாளம்; என்றது, பொருந்தி உலகுயிர்களை இயக்கி நிற்கும் சிவசத்தியினை. குறியாதல்-சிவபரம் பொருளையுணர்தற்குரிய அடையாளமாதல். சிந்தனைக்கரிய சிவபரம் பொருளையுணர்தற்குரிய அடையாளமாக [திருமேனியாக]த் திகழ்வது கதிரவனிற் கதிர்போன்று அம் முதல்வனிற் பிரிப்பின்றி உலகுயிர்கள் தோறும் விரிந்து பரவிநிற்கும் திருவருளாகிய சிவசத்தியே என்பார், ‘ஒன்றுங்குறியே குறியாதலால்’ என்றார், மாற்ற மனங்கடந்த அம்முதல்வனை அருவம் உருவம் அருவுருவம் என முத்திறமாகப் பகுத்துரைக்கப்படும் உலகப்பொருட் கூற்றினுள் ஒன்றாகக் குறித்துணர்தல் இயலாதென்பார், ‘அதனுக்கு ஒன்றுங்குறி ஒன்று இலாமையினால்’ எனறார். இங்ஙனம் உலகப் பொருள்களில் எதனையும் உவமை காட்டியுணர்த்தலாகாதவாறு தனக்குவமையில் லாத தனி முதற்பொருளாகத் திகழ்வது சிவபரம்பொருள் என்பார், ‘தான் ஒன்றோடு உவமிக்கலாவதுவும் இல்லை’ என்றார். 'தனக்குவமை யில்லாதான்’ (திருக்குறள்-7) என்றார் தெய்வப்புலவரும். இங்ஙனம் யாவரானும் அறியலொண்ணாத முழுமுதற் பொருள் உண்டு என உலகத்தார் உணர்தற்குச் சான்றாகவுள்ளவர்கள் அவனருளாலே அவன்தாள் வணங்கி அன்பினால் நெஞ்சம் நெக்குருகிக் கண்ணீர் ததும்பி அம்முதல்வனே இடையறாது போற்றும் செம்புலச் செல்வர்களாகிய சிவஞானிகள் என்பார், ‘ஓவாத்தவமிக் காரேயி தற்குச் சான்று’ என்ருர். ஓவாமை-இடையறவின்மை. இதற்கு—இத்தகைய பரம் பொருள் உண்டென்பதற்கு. சான்று-சாட்சி.

ஓவாத் தவமிக்கார் என்றது இடையறாப் பேரன்பால் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சத்தராய் மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் ததும்பச் சிவபரம்பொருளோடு ஒட்டி வாழும் சிவாநுபவம் பெற்ற சிவஞானிகளே. இவர்தம் இயல்பினையும் இத்தகையோர்க்கு இறைவன் நல்கும் பேரின்ப நிலையினையும்,

“உயிரா வணமிருந் துற்று நோக்கி
     உள்ளக் கிழியின் உருவெழுதி
உயிர் ஆவணஞ் செய்திட்டு உன்கைத்தந்தார்
     உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி” (6–25—1)

எனவரும் திருத்தாண்டகத்தால் இனிதுணரலாம்:

இத்தகைய தவப்பெருஞ்செல்வர்கள் சிவபரம்பொருளை உலகத்தார் உணர்தற்குரிய சாட்சியாய் விளங்குந் திறத்தினை,