ஒரு காரியம் செய்ய வேண்டியது மிக அவசியம். 'மணிக்கொடி காலம்', 'சரஸ்வதி காலம்' நூல்களைப் போல, 'தீபம் யுகம்' எனும் நூலை நீங்கள் வெளியிட வேண்டும். அதை எழுதுவதற்கு எல்லா வகையிலும் மிகப் பொருத்தமானவர் வல்லிக்கண்ணன்தான். இந்நூலை இயற்றும் பணியை உடனே அவரிடம் ஒப்படையுங்கள். தமிழுக்கு ஓர் அற்புதமான வரலாற்றுப் பெட்டகம் கிடைக்கும்" என்று சொன்னேன்.
என் யோசனையை மனம் உவந்து ஏற்ற அ. நா. பா. அவர்களையும் அவரது வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றிய என் பெருமதிப்புக்குரிய பேராசான் வ.க. அவர்களையும் உலகெங்கணும் உள்ள தமிழ் அன்பர்கள் உளமாரப் பாராட்டுவர் என்பது உறுதி.
ஒரு இலக்கிய ஆய்வு மாணவனின் அக்கறையோடும் ஈடுபாட்டுடனும் 'தீபம்' இதழ்களைப் பரிசீலித்து இந்த இலக்கிய வரலாற்று ஆவணத்தை எழுதியுள்ள முதுபெரும் எழுத்தாளர் வ.க. அவர்களையும், எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்து, அரிதின் முயன்று நூலை, வெளிக்கொண்டுவரும் கர்ம வீரர் அ.நா.பா. அவர்களையும், இவர்களுக்கு உறுதுணையாக விளங்கிய இதர அன்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
1965 முதல் 1988 வரை இலக்கியவாதிகளின் வேடந்தாங்கல் ஆக விளங்கியது 'தீபம்'. அங்கு முட்டையிட்டுக் குஞ்சு பொறித்த - தங்கி இளைப்பாறி, ஊக்கமும் உத்வேகமும் பெற்ற பறவைகள் எத்தனையோ.
தமிழ் இலக்கிய வரலாற்றில், பாரதி பாதையில், 'மணிக்கொடி' மரபில் நவயுக இலக்கியம் வளர வழி அமைத்த 'தீபம்' இதழும் அதன் ஆசிரியர் நா.பா.வும் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் சுடர் விட்டு ஒளிர்வது திண்ணம்.
தி. க. சிவசங்கரன் (தி.க.சி.) திருநெல்வேலி - 6; 15.3.1998