உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுரை


தமிழ் மொழியின் வளத்துக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் மிகுந்த அளவில் பங்களித்து வருவன சிற்றிதழ்களே ஆகும். படைப்பாளிகளின் புதுமையான முயற்சிகளுக்கும் சோதனை ரீதியான படைப்புகளுக்கும் மற்றும் ஆற்றல் பெற்ற புதிய படைப்பாளிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் அளவில் துணை புரிவனவும் சிற்றிதழ்கள்தான்.

இவ்வகையில், இதழியல் வரலாற்றில் தமக்கெனத் தனி இடம் பெற்றுள்ள கலை இலக்கியச் சிற்றிதழ்கள் வரிசையில் 'தீபம்' மாத இதழும் சேர்கிறது.

'தீபம்' ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்களின் பேராற்றலும் இலட்சிய தாகமும் அயராத உழைப்பும் பத்திரிகை முயற்சியிலும் வளர்ச்சியிலும் அவருக்குத் துணையாகச் சேர்ந்து உழைத்த நண்பர்கள், எழுத்தாளர்களின் ஆர்வம் நிறைந்த ஒத்துழைப்பும் 'தீபம்' இலக்கிய உலகில் தடம் பதித்து உயர்ந்து நிற்பதை சாத்தியமாக்கின.

'தீபம் 23 ஆண்டுகள்தான் செயலாற்றியது. ஆயினும் அதன் சாதனைகள் வரலாற்றுப் பெருமை உடையனவாகும். அதன் வரலாற்றையும் சாதனைகளையும் இச் சிறுநூல் சுட்டிக்காட்டுகிறது.

நா.பா. அவர்களிடம் பெருமதிப்பும் பேரன்பும் உயர் நட்பும் கொண்டுள்ள ஞானியார் அடிகள் மன்றம் அ. நா. பாலகிருஷ்ணன் அமரர் நா.பா.வின் நினைவை ஆண்டுதோறும் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்து வருகிறார். அத்துடன் அமையாது, நா.பா.வின் நினைவை கால காலத்துக்கும் எடுத்துச் சொல்லும் விதத்தில் நா.பா. அவர்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்களின் நினைவுகளை சேகரம் செய்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு உண்டு.

அப்படி ஒரு நினைவுத் தொகுப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, நா.பா.வின் பேராற்றலின் சின்னமாகத் திகழ்ந்த 'தீபம்' இதழின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/7&oldid=1111332" இலிருந்து மீள்விக்கப்பட்டது