உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துணிந்தவன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் 2 இயற்கையின் மோகன எழிலால் வசீகரிக்கப்பட்டன. ஊர்ந்து நெளியும் காற்றினால் சலனமுற்ற நீர்ப்பரப்பின் சிறுசிறு அசைவுகள் தோறும் அம்புலியின் வெள்ளிய ஒளி, அற்புதம் செய்துகொண்டிருந்தது. சூழ்நிலையில் அமைதி கொலுவிருந்த போதிலும் அவன் உள்ளத்திலே அமைதி இல்லை. கசப்பும் வெறுப்பும், ஒருவித விரக்தியும் மண்டிச் சுழன்றன. அங்கு. - வெறுப்பு, சுற்றுப்புறத்தின் மீது.. மனிதர்கள் மீது.... அவர்களின் சின்னத்தனங்கள் மீது.... தன் மீது கூட அவனுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. பழமையின் பேராலும், பண்பாட்டின் பேராலும், நீதி நியாயம் - சமூக :ர்மம் முதலிய கட்டுப்பாடுகளின் பேராலும் தனி மனிதர்களைச் செயலற்றவர்களாய், கோழைகளாய், துணிச்சல் பெறமுடியாதவர்களாய் மாற்றிவிட்ட - இனியும் மாற்றப்போகிற அமைப்பு முறையின் மீது அவனுக்கு மிகுந்த கசப்பு ஏற்பட்டிருந்தது. திடீரென்று பிறந்த கசப்பு அல்ல அது. அவனுக்கு இப்பொழுது முப்பத்திரண்டு வயதாகிறது. பதினாறு - பதினேழு வயக வரை அவனும் மனோகரமான இன்பக் கனவுகளிலே மூழ்கிக் கிடந்தான். இனிமை நிறைந்த எதிர்காலம் பற்றிய பசுமையான சித்திரங்களைத் திட்டி மகிழ்ந்தது அவன் மனம். மகத்தான நம்பிக்கை உறைந் திருந்தது அவனுள். நாட்கள் தேயத்தேய, அவனுடைய வயது வளர வளர, வருங்காலம் பற்றிய பசுமைகள் எல்லாம் நிகழ் காலத்தின் அனுபவ வெயிலிலே காய்ந்து கருகித் தீய்ந்து போயின. நம்பிக்கை வறட்சி அவனுள்ளத்தில் தலை துக்கி வளர்ந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/14&oldid=923485" இலிருந்து மீள்விக்கப்பட்டது