வாழ்க்கை
வெயில் தீக்கங்குகளைச் சொரிவதுபோல், அனலைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஈவு இரக்கம் இல்லாதவர்களின் உள்ளம் போல் வறண்டு கிடந்தது நிலம்.
உழைப்பை நம்பி வாழ்பவர்கள் அப்போதும் அரும்பாடுபட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஒரு கிழவன் மண்ணைக் கொத்திக் கிளறி என்னவோ செய்து கொண்டிருந்தான்.
அவனுக்குத் துணை அவன் மனைவி கிழவி.
இரண்டு பேருக்கும் உயிர் வாழ்வதற்கு உரம் அளித்தது அவர்கள் உழைப்பு. அதற்கு ஆதாரம் கொஞ்சம் நிலம்.
கிழவன் மண்வெட்டியால் கொத்தி மண்ணைச் சரி செய்து பத்தி பிடித்தால், மண்ணில் கலந்து கிடக்கும் கற்கள், கட்டிகள் முதலிய வேண்டாத பொருட்களை அள்ளிக் கூடையில் சேர்த்து, சுமந்து சென்று அப்புறப்படுத்துவாள் கிழவி. அவன் விதைகளைத் தெளிப்பான்: அவள் தண்ணீர் இறைப்பாள். உழைப்பால் மெலிந்த கிழவனுக்கு உற்றதுணையாக உடனிருந்து ஊக்கம் கொடுத்து வந்தாள் அந்தக் கிழவி.
அவன் பெயர் யாருக்கும் தெரியாது. ‘ஏ கிழவா!’ என்றே எல்லோரும் அவனைக் கூப்பிடுவார்கள். அவளுக்கும் தனியாக ஒரு பெயர் இல்லாமலா இருக்-