பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழி நல்ல தோழிதான்

கும்? எனினும் ‘கிழவி’ என்றுதான் அவள் அழைக்கப் பட்டாள்.

அவனது வயது.., அவனுக்கே தெரியாது. அவள் பிறந்த வருடத்தையும் நாளையும் எவரும் குறித்து வைத்திருக்கவுமில்லை. இரண்டு பேருக்கும் வயது அதிகமாகத்தான் இருக்கும். எவ்வளவு என்று கணக்கிட அவர்களும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை: பிறரும் கவலைப்பட்டதில்லை,

அவர்கள் அறிந்தது உழைப்பு ஒன்றே. நேற்றுப் போல் இன்று, இன்றுபோல் நாளை. என்றும் ஒரே மாதிரித்தான். உழைப்பிலே உதயமாகி, உழைப்போடு அஸ்தமனமாகும்.

அவர்கள் தனிமைப்பட்டவர்கள். கிழவன் ஆகிவிட்ட அந்த மனிதனுக்குக் கிழவி ஆகிவிட்ட ஒருத்தி தான் துனை. இருவருக்கும் அவர்களது உழைப்பே வாழ்விக்கும் சக்தியாக இருந்தது. உழைக்கவும், உயிர் வாழவும் அவர்கள் மண்ணை நம்பி இருந்தார்கள்.

வெயில் செஞ்சூலம் பாய்ச்சும் கொடிய நாட்களிலும் அவர்கள் உழைத்தார்கள். மழை நாட்களிலும் பாடுபட்டார்கள். மழை கொட்டுகிறபோது நனைந்தும், ஓடிப் பதுங்கியும், மழை நின்றதும் மீண்டும் மண்ணில் இறங்கியும் உழைத்தார்கள். உழைக்காமல் இருக்க முடியாது அவர்களால். பாடுபட்டால்தான் அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்.

ஒரு சமயம் மழையில் நனைந்தபடி குடிசைக்குத் திரும்பினான் கிழவன். ஜூரம் அவனைப் பற்றிக் கொண்டது. இரண்டு மூன்று நாட்கள் விடாது அடை மழை பெய்தது. அவனுக்குத் துணையாகக் கிழவியும், இருவருக்கும் துணையாகப் பட்டினியும் என்ற நிலையே நீடித்தது.