தோழி நல்ல தோழிதான் ★ 28
அவள் விழி வண்டுகள் வட்டமிட்ட திசையை நோக்கி, அங்கிருந்தவன் பார்த்ததையும் கவனித்து விட்டு, வசந்தா குறும்பாகச் சிரித்தாள். “பார்வையிலே ஒரு சுகம், உன் பார்வை தந்த சுகம்” என்று இசைத்தாள்.
“என்னடி நீ?” என்று காஞ்சனா கத்தியதற்கு, தோழியின் பதில் இடக்காக நீண்டது, “பார்த்தால் போதுமா? பேசிப் பழக வேண்டாமா?” என்று பாட்டிழுப்பாக.
“எனக்குக் கெட்ட கோபம் வரும்டி, வசந்தா!” என்று கோபக் குரல் காட்டிய காஞ்சனா, அவள் பின்னலைப் பற்றி இழுக்கக் கை நீட்டினாள்.
அவள் பிடியில் சிக்காமல் துள்ளி ஓட, இவள் துரத்த, ஜாலி விளையாட்டாகத் திரும்பியது அவர்கள் போக்கு.
பார்த்துக் கொண்டிருந்தவன் ரசனைக்கு நல்ல விருந்து.
அவனுக்கு இருபத்தைந்துக்கு மேல் முப்பதுக்குள் எந்த வயசும் இருக்கலாம். ‘நவயுகடிசைன்: நாகரிக மாடல்.’ எங்கோ ஓர் ஆபீசில் ஏதோ ஒரு வேலை. உடம்பிலே பிடிக்காத வேலை மட்டுமல்ல, ஓய்வாகப் பொழுது போக்க நிறையவே நேரம் இருந்தது என்பதும் அதில் முக்கிய பாயிண்ட். எப்படியாவது இனிமையாகப் பொழுது போக வேண்டும்-இது தவிர வேறு முக்கிய நோக்கம் எதுவும் அவனுக்கு வாழ்க்கையில் இருந்ததாகத் தெரியவில்லை.
அவன் அந்தப் பெண்களை முதலில் சும்மா பார்த்தான். அவ்விருவரும் தன்னைப் பார்ப்பதும், என்னவோ சொல்லிச் சிரிப்பதும், மீண்டும் பார்ப்பது