உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



எழுதி வைத்திருப்பதையும் பார்த்தோம். எழுதியிருப்பது என்ன என்று எங்களுக்குப் புரியவில்லை. போவோர் வருவோரைக் கேட்டுப் பார்க்கவும் எங்களுக்கு அந்நகர மொழியாகிய உஸ்பெக் மொழியோ, ஒன்றிய மொழியாகிய இரஷிய மொழியோ தெரி யாது. ஆகவே ஊமையராக நடந்துவிட்டோம். ஏதோ தொழிற்சங்கக் கூட்டமாக இருக்கும் என்பது எங்கள் யூகம்.
மேலும் சில மீட்டர்கள் தூரம் நடந்த பின் அதே வழியில் ஒட்டலுக்குத் திரும்பினோம். மீண்டும் பாட்டிகள் கூடியிருந்த கட்டடத்தை நெருங்கினோம். அந்நேரம் எங்கள் எதிரே வந்த ஒருவர் எங்களைக் கண்டதும் சட்டென்று நின்றார், நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா? என்றார், "ஆம், எப்படித் தெரிந்தது?’ என்றோம். உங்கள் முகத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிட்டது' என்றார், நாங்கள் பல்லிளித்தோம். அவரது அடுத்த கேள்வி "நீங்கள் நேரு இந்தியாவில் இருந்து வருகிறீர்களா?” ஆம்' என்ற எங்களே அதோடு விடவில்லே. ஜவகர்லால் நேரு இந்தியாதானே?’ என்று மேலும் ஒரு கேள்வி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். உங்கள் நேருவிடம் எங்களுக்கெல்லாம் பெருமதிப்பு’ என்று முகம் மலரக் கூறினர். அப்படியா!' என்று இழுத்தோம். ஆம். குண்டைக் காட்டி மிரட்டுகிற தலைவர்களைப் பார்த்து, : இதிலென்ன பெருமை; மனிதப் பண்பைக் காட்டுங்கள்’ என்று துணிந்து சொல்லுகிற தலைவர் உங்கள் தலைவர் என்று கூறிக்கொண்டே எங்கள் கைகளைப் பிடித்து வலுவாகக் குலுக்கினர்.