பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

31


நண்பன்; ஒட்டிக் கொண்டு உறவாடும் இளைஞன்; மூப்பு அவனுக்கு யாப்பு: அஃது அவனை இறுகக் கட்டி நடமாடச் செய்யாமல் அடக்கி வைக்கிறது சாக்காடு அவனை அழைக்கிறது. இந்த நான்கு செய்திகளையும் எண்ணிப் பார்க்கிறான். நண்ணுகிறது ஞானம். விளைவு அவன் இப்பொழுது துறவி.

தம் கடமை எது என்று எண்ணிச் செயல்படுகிறான். அவன் எதற்குக் கவலைப்பட வேண்டும்? கவலைக்கே அச்சம்தான் காரணம், சாத்திரங்களை நாடுவதும் கோத்திரங்களைத் தேடுவதும் துறவிக்குத் தேவை இல்லை. துறவிக்குக் கவலை ஒரு துரும்பு; எதற்கும் அவன் கவலைப்படவே மாட்டான், ஆவது ஆகட்டும், போவது போகட்டும் என்று அவன் நினைக்கிறான்; ‘நாளை’ அதனை அவன் நம்புவதில்லை; ‘நேற்று’ அது பழங்கதை; ‘இன்று’ அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

கட்டி வைத்த வீடு, கடன்காரன் ஒற்றி வைத்ததற்காகப் பற்றிக் கொண்டான். இளமை இன்பம் செய்தது; ஆனால் அஃது அவனை விட்டு நாள் ஆக ஆக அகன்று செல்கிறது. எழில் மிக்கவன் என்று பொழிலில் சந்தித்த அழகி ஒரு காலத்தில் பேசினாள். வனப்புமிக்கவள் என்று கனத்த மொழியில் இவனும் சாதித்தான்; இருவரும் அது கற்பனை என்று அறிகின்றனர். ஈட்டி வைத்த புகழ் இவை எல்லாம் மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்குகின்றன. மறுபடியும் இந்தப் பற்றுகள்! தேவைதானா? துறவு என்ற நிலை அடைந்துவிட்டால் இந்தச் சின்ன சின்ன ஆசைகள் அவனைத் தின்னத் தொடங்குவதில்லை. அவன் வாழ்வு பின்னப்படுவதில்லை.