பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37



ஒருநாள் காந்தாரியும் மங்களநாயகியும் எப்போதையும் காட்டிலும் அதிக அழகாகத் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று சந்திரிகா கேட்டாள்.

"இளவரசர் கண்டெடுத்த ஒரு செருப்பைக் காலில் மாட்டிப் பார்க்கப் போகிறோம். அது எந்தப் பெண்ணின் காலுக்கு பொருந்துகிறதோ அந்தப் பெண்ணையே இளவரசர் திருமணம் செய்துக் கொள்ளுவாராம்!” என்று அவர்கள் சொன்னார்கள்.

"அப்படியானால் நானும் வரட்டுமா?" என்று கேட்டாள் சின்னவள் சந்திரிகா.

"நீயா? அற்பக் கழுதையே! பேசாமல் போய் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இங்கேயே கிட!” என்று மூத்த பெண்கள் இருவரும் அவளை அதட்டி அடக்கினார்கள்.

அவர்கள் சென்ற பிறகு சந்திரிகா தானும் அழகாக ஆடையணிந்து கொண்டு_ இளவரசனின் அர்ண்மனைக்குப் போவதென்று திர்மானித்தாள். ஆனால், அவள் சேலையுடுத்திச் சீவி சிங்காரித்துப் பொட்டிட்டுக் கொண்டு புறப்படத் தயாரான போதுதான், எந்த இடத்தில் இந்தச் செருப்புப் போட்டுப் பார்க்கிறார்கள் என்று தனக்குத் தெரியாதே என்று யோசித்தாள். அப்போது முன்பு இருமுறை தேவதை அருளுடையாளிடம் அவளை ஏற்றிக் கொண்டு சென்ற அதே மாயக்குதிரை அவள் முன்னே வந்து நின்றது.

"நீ என் காவல் தெய்வத்திடமிருந்து வருகிறாய் என்பது எனக்குத் தெரியும். என்னை எங்கு கொண்டு செல்லவேண்டும் என்பது உனக்குத் தெரியும்!” என்று சந்திரிகா சொல்லியவாறு அந்தக் குதிரையின் மேல் ஏறிக் கொண்டாள். குதிரை உடனே தாவிக் குதித்துப் புறப்பட்டது.