பெரும்பான்மையான நூலகங்கள் நூல்களையும் பருவ வெளியீடுகளையும் வாங்குங்கால் தங்களுக்கென ஒரு வழியினை வகுத்துக் கொள்கின்றன. ஆனால் நூல் வாங்கும் முறை (Book Order) எவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றதோ அதைப் பொறுத்துத் தான் கணக்குகளைச் சிக்கல் ஏதுமின்றி எழுத முடியும். அதனைச் சரிபார்க்க வருகின்றவர்களும் சலிப்புத் தட்டாமல் பார்க்க இயலும். மேலும் அவர்களால் குறையொன்றும் சொல்லவும் இயலாது.
சிறு நூலகங்களுக்கும் பள்ளி நூலகங்களுக்கும் நூல் வாங்க வேண்டியது ஏற்பட்டால் அந்நூலக அலுவலர் முதலில் வாங்கவேண்டிய நூல்களுக்குப் பட்டியலொன்று தயாரிக்க வேண்டும். அப்பட்டியலில் ஆசிரியரின் முழுப் பெயர், நூலின் பெயர், விலை, பதிப்பு, பதிப்பகத்தார் இவைகளைப் பற்றிய முழு விவரங்களும் காணப்பட வேண்டும். நூலகப் பட்டியலைத் தயாரிக்குங்கால் இரண்டு படிகள் எழுதுதல் வேண்டும். ஒன்றினை நூல் விற்பனையாளருக்கு அனுப்புதல் வேண்டும். மற்றொன்றினை அலுவலகத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் விற்பனையாளரிடமிருந்து நூல்கள் வந்து சேர்ந்த பின்னர் அவைகளைச் சரிபார்த்தற்கு இது மிகவும் பயன்படும்.
பெரிய நூலகங்களுக்கு நூல்கள் வாங்குங்கால் நூலகத்தார் பின்வரும் முறையினைக் கடைப் பிடித்தல் நலம் பயப்பதாகும்.