உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நெருப்புத் தடயங்கள்

1


ழசாய் போன குட்டாம்பட்டிக்கு, புதுமை சேர்ப்பதுபோல், 'பிளான்' போட்டு கட்டப்பட்ட வீடு. கிணறு என்ற பழமையுடனும், சமையலறைக்குள் குழாய் கிணறு எடுத்து, 'அடிபைப்' என்ற புதுமை மூலம் அமர்க்களப்படும் இல்லம். வயல் மாடுகளையும், வண்டி மாடுகளையும் கட்டுவதற்காக தனியாய் கட்டப்பட்ட தொழுவத்தில் 'சாணத்தை' எடுத்து, சாண எரிவாயு அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம், சமையலறையில், எவர் சில்வர் அடுப்பிற்கு, சூட்டையும் சொரணையையும் கொடுத்துக் கொண்டிருந்தது. கம்பீரமும், எழிலும், கருங்கற்களோடும், சிமெண்ட் சிலாப்களோடும் கலந்து கட்டப்பட்டது போன்ற, இன்னும் 'பால்' காய்க்கப்படாத அந்த புத்தம் புதுவீட்டின் முகப்பறையில், 'மொஸாய்க்' தரையின் தொடர்ச்சி போல் பகட்டில்லாத பளபளப்புடன், திகட்டில்லாத ஒய்யாரத்துடன் காணப்பட்ட தமிழரசியை, கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் 'தலையெடுக்க' முடியாத அளவிற்கு, பலதர வயதுப்பட்ட பெண்கள் சுற்றி நின்றார்கள். சூழக் குவிந்தார்கள். 'தமிழு... தமிளு...' என்று பல வகையான சத்தங்கள்