பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

பொதுமக்கள் வாழ்ந்த வீடுகளைப் பற்றி அதிகம் கூறவே முடியவில்லை. ஏனெனில் அவற்றைப் பற்றி இலக்கியங்கள் கூறும் செய்திகள் அல்லாது நேரிடைச் சான்றுகள் ஏதும் கிட்டாததனாலேயாகும்.14

இலக்கியங்களில் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. நகர அமைப்புப் பற்றியும் பேசப்படுகிறது. யவனப் போர் வீரன் ஒருவன் யானை மீது கொடியைப் பிடித்தபடி அமர்ந்து உள்ளே செல்லுமளவு மிக உயர்ந்த அரண்மனை வாயில்கள் விளங்கியுள்ளன. பெரிய மாளிகைகள் இருந்துள்ளன. ஐவகை நிலங்களுக்கு ஏற்ப (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) மக்கள் சிறுசிறு வீடுகள் கட்டி வாழ்ந்துள்ளனர் என்றாலும் அவை பற்றிய நேரிடைச் சான்றுகள் அதிகமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் நடைபெற்ற அகழ்வாய்வில் புத்த விகாரம் ஒன்றும், பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் முகத்துவாரக்கட்டடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மக்கள் வாழ்ந்த கட்டடப் பகுதி (Secular Buildings) எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொற்கையில் நிகழ்ந்த அகழ்வாய்விலும் உறையூரில் மேற்கொண்ட அகழ்வாய்விலும் கி. பி. 11-12 நூற்றாண்டைச் சேர்ந்த சில கட்டடப்பகுதிகள் கிடைத்தன. அவை அக்காலத்திய கட்டடக்கலை பற்றித் தெளிவாக எதையும் தெரிவிப்பனவாக அமையவில்லை. அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு பகுதியை அகழ்வாய்வு செய்தபோது, நகரின் பகுதியான உள்கோட்டையில் முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்து வாழ்ந்த அரண்மனைப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; முழுப்