உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

குயிற் பாட்டு

மீட்டு நின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே! என்றந்தத்
தென் பொதியை மாமுனிவர் செப்பினார்; சாமீ!
குயிலுருவங் கொண்டேன் யான், கோமானோ மென்மை
பயிலு மனிதவுருப் பற்றிநின்றான், எம்முள்ளே 180
காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம்;
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாயதோ?' என்றிசைத்தேன், புன்னகையில்
ஐயர் உரைப்பார்: 'அடி பேதாய்! இப்பிறவி
தன்னிலும் நீ விந்திகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185
கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190
நின்னைக் குயிலாக்கிநீ செல்லுந் திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார். நீயிதனைத் தேர்கிலையோ?’
என்றார். விதியே: இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப்
பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி 195
வாதைப் படுத்தி வருமாயில், யானெனது
காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே, மற்றிதற் கோர்
மாற்றிலை யோ? என்று மறுகி நான் கேட்கையிலே,
தேற்றமுறு மாமுனிவர் செப்பு கின்றார்;— 'பெண்குயிலே! 200
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல் வேந்தன். 205
ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென்(று) எண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்;
பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய்;